பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற்போது பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் செலவுகளைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாகப் பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர், பாதி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த சூழளில் பிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக இந்நிறுவனத்திற்கு வருவாய் சரிந்துள்ளதாலும், செலவுகளைக் குறைப்பதற்காகவும் மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த முடிவுகளுக்கும், நாங்கள் இங்கு எப்படி வந்தோம் என்பதற்கும் நான் பொறுப்பேற்க விரும்புகிறேன். இது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் குறிப்பாக வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனுடன், மெட்டா நிறுவனத்தின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மெட்டாவின் செலவுகளைக் குறைக்க, 2023ஆம் ஆண்டின் தொடக்கம் வரை எந்த புதிய ஊழியர்களையும் பணியமர்த்தப் போவதில்லை என மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்களின் விழைவுகளுக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதனிடையே, பணிநீக்க முடிவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான ஊதியத்தை இழப்பீடாக வழங்கவும் மெட்டா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







