தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.   தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சாந்தோம்…

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சாந்தோம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆறு கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.

3 கோடியே 3 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 758 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், வரும் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனக்கூறிய சத்யபிரதா சாகு, இறந்தவர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவாக இருக்கும் பெயர்கள் என 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

– நம்பிராஜன்

TWITTER ID: https://twitter.com/Nambijournalist

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.