ஹைதராபாத்தில் தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு கடந்த 14-ம் தேதி தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற காவல் துறையினர், துர்நாற்றம் வீசும் அந்த வீட்டைத் திறந்தபோது ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அந்த சடலத்துக்கு அருகில் மனப்பிறழ்வு ஏற்பட்ட 22 வயது இளைஞர் ஒருவரும் அமர்ந்திருந்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த இளைஞரையும் போலீஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா ஆணையர் மண்டலத்தின் மல்காஜ்கிரி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அடுக்குமாடி கட்டடத்தில் கடந்த 14ஆம் தேதி சனிக்கிழமையன்று துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகாரளித்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது அந்த வீட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்துகிடந்தார். அந்தப் பெண் விஜயவாணி என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர் இறந்து மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம். அவரது சடலத்துடன் அவரின் மகனும் இருந்திருக்கிறார்.
உயிரிழந்த விஜயவாணி தன் மகன் வெங்கட்சாயுடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. தற்போது வழக்குப் பதிவு செய்து, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். பி.டெக் பட்டதாரியான சாய், தன் தாயைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தனர்.








