தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பனையூர் தலைமை அலுவலகத்தில் இணைவதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வருகை தந்தனர்.
இதில், எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான், இபிஎஸ் உறவினர் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா தவெகவில் இணைத்தார். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “தவெகவில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். அதிமுக வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது தவெக அமைச்சர் செங்கோட்டையன். அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்ததால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.




