தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் விஜய் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் மீது விவாதம் நடைபெறு வருகிறது.
தீர்மானத்தை ஆதரித்து பேசிய அமைச்சரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராஜேஷ்குமார்,”முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழ்நாடு விவசாயிகளின் உயிர்நாடி. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கு வரும் நீரைத் தடுத்து மேகதாதுவில் அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மஜக தமிமுன் அன்சாரி, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை உருவாக்க வேண்டும். தமிழக நலன் சார்ந்த விவகாரத்தில் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்” என்றார்.
விசிக சார்பில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தமிழர் உரிமை காக்கும் அரசின் அனைத்து முடிவுகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். இதமிழக வேளான் நலனுக்காக மட்டுமல்ல கர்நாடக விவசாயிகள் மீது அக்கறையுடன் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் ஒப்புதலின்றி செயல்படக்கூடாது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசிய ராமச்சந்திரன், “ மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறும். 5 கோடி மக்களின் குடிநீர் தாம் தீர்க்கிறது ஜீவ நதியான காவிரி நதி. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும்” என்றார்.
கொமதேக எம்எல்ஏ நித்யானந்தம் பேசிதாவது: முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது தீர்மானத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி ஆதரவு. கூட்டணி தர்மத்தை விட தமிழ்நாட்டின் தர்மம் முக்கியம் என தவெக அரசு செயல்பட வேண்டும். கர்நாடக அரசை தடுப்பதற்கு சட்ட நடவடிக்கையே சிறந்தது.
மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜவாஹிருல்லா: “மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் தவறான திசையில் செல்கிறது. கர்நாடக முதல்வர் சுயலாபத்திற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து அணை கட்ட முயற்சி. உச்சநீதிமன்ற தீர்ப்பை திசை திருப்பி தவறான முறையில் சாதகமாக பயன்படுத்த கர்நாடக முதலமைச்சர் முயற்சிக்கிறார்” என்றார்.




