மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள இந்தியா லிமிடெட் நிறுவனம்(என்எல்சி)  திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து அனல் மின் நிலையங்களின் மூலம் மின்சாரம் தயாரித்து தமிழ்நாடு  கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

இதனிடையே கர்நாடகா அரசு மேகதாதில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அணை
கட்ட முயற்சி செய்வதாக அறிவித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் உரிமை பறிக்கப்படுகிறது என்று கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெய்வேலி பகுதியில் உள்ள இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு  கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

அப்பொழுது என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்
நிலையத்திற்கு பூட்டு போட முயன்றனர். தொடர்ந்து அந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.