மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

மேகதாதுவில் அணை அமைக்க தங்களுக்கு எந்த விதமான உடன்பாடும் கிடையாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் யானை…

மேகதாதுவில் அணை அமைக்க தங்களுக்கு எந்த விதமான உடன்பாடும் கிடையாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கர்நாடக அரசு அணை அமைக்க திட்டமிட்டுள்ள மேகதாது பகுதி யானைகள் வழித்தடம் என்பதால் அங்கே அணை அமைக்கும் பட்சத்தில் அது சூழியல் கேடாக மாறிவிடும் என்றும், எனவே இயற்கை வளத்தை மனதில் கொண்டு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், மேகதாது பகுதியில் அணை அமைப்பதற்கு பதிலாக காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இதில் தற்பொழுது பதிலளித்துள்ள தமிழக அரசு மேகதாதுவில் அணை அமைக்க தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசின் ஒருமித்த கருத்துடன் மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. ஆனால் அணை அமைக்க தங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் ராசிமணல் பகுதியில் அணை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பெரிய அளவிலான எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.