ஐதராபாத்தில் சிறுமி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள். ஒருவர் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட ஒருவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகன் ஆவார்.
5 பேருக்கு எதிராக கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு மரண தண்டனை, 20 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
6 ஆவதாக கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐதராபாத் காவல் துறை ஆணையர் சி.வி.ஆனந்த் கூறுகையில், “கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.
முன்னதாக, கடந்த வாரம் பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டார். காரில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகனும் இருந்ததாக ரகுநந்தன் குற்றம்சாட்டினார்.
-மணிகண்டன்







