இதுக்காக தான் திருடினோம் – கொள்ளையர்கள் வாக்கு மூலம்

சென்னை, தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் பால் கடை என அடுத்தடுத்த இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை, போலீசார் விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.   சென்னை தாம்பரம்…

சென்னை, தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் பால் கடை என அடுத்தடுத்த இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை, போலீசார் விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

 

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் தாமோதரன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு 10 மணிக்கு பெட்ரோல் பங்கை மூடிவிட்டு, காலையில் 5 மணிக்கு திறப்பார். இந்நிலையில், நேற்று காலையில் பெட்ரோல் பங்கை திறந்து பார்த்தபோது, மேலாளர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

 

மேலும் பெட்ரோல் பங்க் அருகே ஜெயபிரகாஷ் என்பவர் வைத்திருந்த பால் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 3 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நெய் டப்பாக்கள் காணாமல் போயிருந்தன. உடனே இது தொடர்பாக பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கௌபார் மூலமாக ஷட்டரின் பூட்டை உடைத்து 3 பேர் பணத்தை கொள்ளை அடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்து சுமார் 73 கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது கொள்ளையர்கள் மகாபலிபுரத்தில் தனியார் ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்று 3 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மதன் (வயது-21), திருவல்லிக்கேணியை சேர்ந்த கௌதம் குமார் (வயது-18) சென்ட்ரல் பல்லவன் சாலையை சேர்ந்த 17-வயது சிறுவன் என தெரியவந்தது.

 

மேலும் விசாரணையில் திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தை திருடி வந்து, முடிச்சூரில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. பின்னர் கொள்ளையடித்த பணத்தில் மகாபலிபுரம் சென்று விடுதியில் அறை எடுத்து தங்கி மதுபோதையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த ஒரு செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி இரண்டு பேரை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மதன் என்பவர் 8 முறை திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளது தெரியவந்ததுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் முடிச்சூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்ததால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.