மரண தண்டனைக்கு உலகளாவிய தடை விதிக்கும் தீர்மானம்: ஐ.நா.வில் இந்தியா எதிர்ப்பு

மரண தண்டனைக்கு உலகளாவிய அளவில் தற்காலிகத் தடை விதிக்கக் கோரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

மரண தண்டனைக்கு உலகளாவிய அளவில் தற்காலிகத் தடை விதிக்கக் கோரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில், இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 133 நாடுகளும், எதிராக 33 நாடுகளும் வாக்களித்தன. 16 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடை விதிப்பது தொடர்பான இந்தத் தீர்மானத்தை மெக்சிகோ நாடு முன்மொழிந்தது. இதன் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், மாலத்தீவுகள், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

தீர்மானத்தில் கூறப்பட்டவை

மரண தண்டனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்தத் தீர்மானம், சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு, தங்களுக்கான சட்ட அமைப்புகளையும் உரிய தண்டனைகளையும் தீர்மானிக்கும் அனைத்து நாடுகளின் உரிமையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மரண தண்டனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கெனவே மரண தண்டனையை ஒழித்த நாடுகள், அதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

உலகளவில் மரண தண்டனையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் போக்கு காணப்பட்டாலும், 2025-ம் ஆண்டில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகப் பதிவான எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தீர்மானம் கவலை தெரிவித்துள்ளது.

சிலருக்கு மரண தண்டனை கூடாது

18 வயதுக்குக் குறைவான வயதில் குற்றம் செய்தவர்களுக்கும், குற்றம் செய்தபோது அவர்களின் வயதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாதவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது எனத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், மனநலம் அல்லது அறிவுசார் குறைபாடுகள் கொண்டவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு மரண தண்டனை விதிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. கட்டாயமாக மரண தண்டனை விதிக்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.