விண்வெளி பயணத்தில் புதிய சாதனை: திரும்பிய Starship-ஐ பிடித்து அசத்திய SpaceX!

விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய Starship விண்கலத்தை, டெக்சாஸில் உள்ள ஏவுதளக் கோபுரத்தின் பிரம்மாண்ட இயந்திரக் கைகளால் வெற்றிகரமாகப் பிடித்து SpaceX நிறுவனம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய Starship விண்கலத்தை, அதன் ஏவுதளக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்ட இயந்திரக் கைகளால் வெற்றிகரமாகப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

14 முறை பூமியைச் சுற்றிய Starship!

SpaceX நிறுவனத்தின் Starship விண்கலம் தனது 15-வது சோதனைப் பயணத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Starbase ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் 171 அடி உயரம் கொண்ட Starship விண்கலமும், அதனை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் Super Heavy Booster ராக்கெட்டும் இடம்பெற்றிருந்தன.

முதலில் 33 Raptor என்ஜின்களின் உதவியுடன் Super Heavy Booster ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. பின்னர், ‘Hot Staging’ முறையில் Booster-இலிருந்து Starship விண்கலம் பிரிந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது. தொடர்ந்து 6 Raptor என்ஜின்களின் உதவியுடன் விண்வெளியை அடைந்தது. இந்தப் பயணத்தின்போது சுமார் 161 மைல் (260 கி.மீ.) உயரத்தில் 26 Starlink செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியது. தொடர்ந்து பூமியை 14 முறை சுற்றி வந்த Starship, 20 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் பயணித்த பின்னர் பூமிக்குத் திரும்பத் தயாரானது.

மெக்சிகோ வளைகுடாவில் விழுந்த Booster!

இதற்கிடையே, ராக்கெட்டை விண்ணுக்கு எடுத்துச் சென்ற Super Heavy Booster-ஐ மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டு வந்து இயந்திரக் கைகளால் பிடிக்க SpaceX திட்டமிட்டிருந்தது. ஆனால், எரிபொருள் அளவு குறைவாக இருந்ததால் Booster-ன் திரும்பும் பயணத்திற்கான ‘Boostback Burn’ திட்டமிட்டதைவிட முன்கூட்டியே முடிவடைந்தது. இதையடுத்து, அதன் வழிகாட்டுதல், வழிசெலுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தானியங்கி அவசர நிறுத்த நடவடிக்கையால், திட்டமிட்ட ஏவுதளத்திற்குப் பதிலாக கடலோரப் பகுதியில் தரையிறங்கும் வகையில் அதன் பாதை மாற்றப்பட்டது. இதனால் Super Heavy Booster-ஐ மீண்டும் பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது. அது மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் விழுந்தது.

விண்கலத்தைப் பிடித்த இயந்திரக் கைகள்!

மறுபுறம், தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த Starship விண்கலம், பூமிக்குத் திரும்புவதற்காக மீண்டும் தனது என்ஜின்களில் ஒன்றை இயக்கி சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறும் செயல்பாட்டை மேற்கொண்டது. பின்னர் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, அதிக வெப்பத்தை எதிர்கொண்டு டெக்சாஸ் கடற்கரைப் பகுதியை நோக்கி இறங்கியது. வளிமண்டலத்தில் நுழைந்ததால் விண்கலத்தின் வெளிப்பகுதியில் வெப்பத்தால் கருகிய அடையாளங்கள் காணப்பட்டன. இருப்பினும், விண்கலம் நிலைத்தன்மையுடன் இருந்தது.

ஏவுதளத்தை நெருங்கியபோது அதன் 3 Raptor என்ஜின்கள் மீண்டும் இயக்கப்பட்டு, விண்கலம் செங்குத்தான நிலைக்கு மாற்றப்பட்டு வேகம் குறைக்கப்பட்டது. பின்னர் விண்கலத்தின் மேற்பகுதியில் இருந்த இரண்டு சிறப்புப் பிடிப்புப் பகுதிகளை, ஏவுதளக் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட இயந்திரக் கைகள் துல்லியமாகப் பிடித்தன. இதன் மூலம் விண்கலம் தரையில் இறங்காமல், கோபுரத்தின் இயந்திரக் கைகளில் அந்தரத்தில் தொங்கியபடி நிலைநிறுத்தப்பட்டது. விண்வெளிக்குச் சென்று திரும்பிய விண்கலம் ஒன்றை இயந்திரக் கைகளால் வெற்றிகரமாகப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். SpaceX நிறுவனத்தின் இந்தச் சாதனையைப் பற்றி கருத்து தெரிவித்த அந்நிறுவனத்தின் மிஷன் வர்ணனையாளர் டான் ஹூட், இது விண்வெளிப் பயணத்தில் விடுபட்டிருந்த முக்கியமான இணைப்பு என்றும், மிகப்பெரிய இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்!

பொதுவாக விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும்போது, அதன் சில பகுதிகளை மட்டுமே மீண்டும் பயன்படுத்த முடியும். உதாரணமாக, SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் முதல் நிலையை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து பயன்படுத்த முடியும். ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் கொண்டு செல்லும் இரண்டாவது நிலை ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் கடலில் விழும் வகையில் கைவிடப்படுகிறது. ஆனால், Starship திட்டத்தின் முக்கிய நோக்கம் ராக்கெட்டின் இரண்டு நிலைகளையும் பூமிக்குத் திரும்பக் கொண்டு வந்து மீண்டும் பயன்படுத்துவதாகும். வணிக விமானங்களைப் போல விண்வெளிக்குச் சென்று திரும்பிய பிறகு குறைந்த அளவிலான பராமரிப்புடன் மீண்டும் பயணிக்கக்கூடிய விண்கலத்தை உருவாக்க SpaceX முயற்சி செய்து வருகிறது.

இருப்பினும், ஒரே பயணத்தில் Starship விண்கலம் மற்றும் Super Heavy Booster ஆகிய இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாக மீட்டெடுக்கும் சோதனையை SpaceX இன்னும் நிறைவு செய்யவில்லை. மேலும், பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது ஏற்படும் அதிக வெப்பத்திலிருந்து விண்கலத்தைப் பாதுகாக்கும் வகையில் நூற்றுக்கணக்கான கருப்பு நிற அறுகோண வடிவ வெப்பப் பாதுகாப்பு ஓடுகள் (Heat Shield Tiles) பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை அதிக பராமரிப்பின்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டியுள்ளது.

எலான் மஸ்க், நாசா பாராட்டு!

இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து SpaceX நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேனும் எலான் மஸ்க் மற்றும் SpaceX குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை எதிர்கால நிலவுப் பயணங்களை நோக்கிய மற்றொரு முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் SpaceX குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விண்கலத்தைப் பிடித்தது அறிவியல் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல இருப்பதாகவும், நேரலையில் அதைப் பார்ப்பது வியப்பாக இருந்ததாகவும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நிலவுப் பயணத்திற்கு வழிவகுக்கும் Starship!

Starship விண்கலத்தை உருவாக்குவதற்காக SpaceX நிறுவனம் இதுவரை 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. மேலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனது Artemis திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல Starship விண்கலத்தைப் பயன்படுத்துவதற்காக, 2021-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் SpaceX நிறுவனத்திற்கு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையே, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்களுக்கு இடையே எரிபொருளைப் பரிமாற்றம் செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது Starship திட்டத்தின் முக்கிய சவாலாக உள்ளது. பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி நிலவுக்குச் செல்வதற்கு இந்த எரிபொருள் பரிமாற்றத் தொழில்நுட்பம் அவசியமாகும். எனவே, Starship விண்கலத்தை வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து இயந்திரக் கைகளால் பிடித்திருப்பது SpaceX நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான பொறியியல் சாதனையாக அமைந்துள்ளது. இருப்பினும், முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் என்ற இலக்கை அடைய அந்நிறுவனம் இன்னும் பல்வேறு சோதனைகளையும் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.