பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தனது கணவரும் இளவரசருமான வில்லியமுடன் இந்தியா வருகை தர உள்ளார். காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் Earthshot Prize விருது விழாவில் பங்கேற்பதற்காக இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் (நவ.16 – நவ18) மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அரச தம்பதியினர், மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர். வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள Earthshot Prize விருது வழங்கும் விழாவிலும் அவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு முக்கியப் பயணம்!
இளவரசி கேட், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்கான தடுப்பு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு, தான் புற்றுநோயிலிருந்து மீண்டு நிவாரண நிலையில் (Remission) இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து படிப்படியாக அரச குடும்பப் பொறுப்புகளுக்குத் திரும்பி வந்தார். இந்நிலையில், கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக இந்த இந்தியப் பயணம் அமைந்துள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் அரச தம்பதி!
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு இணைந்து இந்தியாவுக்கு வருகை தந்தனர். தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இந்தியா வர உள்ளனர். மேலும், அரச தம்பதியினர் இணைந்து கடைசியாக மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் 2022-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அமைந்தது. அங்கு நடைபெற்ற Earthshot Prize விருது விழாவில் அவர்கள் பங்கேற்றனர்.
Earthshot Prize விருதைத் தொடங்கிய இளவரசர் வில்லியம்!
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இளவரசர் வில்லியம் கடந்த 2020-ஆம் ஆண்டு Earthshot Prize விருதைத் தொடங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கும் திட்டங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் 5 வெற்றியாளர்களுக்கும் தலா 10 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் (சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள்) பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக கென்சிங்டன் அரண்மனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவதே Earthshot விருதின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பூமி எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்கள் தீவிரமானவை என்றாலும், அவற்றுக்குத் தீர்வு காண்பதில் மனிதர்களின் புதுமைச் சிந்தனை, உறுதி மற்றும் படைப்பாற்றல் ஆகியவை வலிமையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!
மும்பையில் நடைபெறவுள்ள Earthshot Prize விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோருடன் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் ராமி மாலெக் மற்றும் பிரிட்டன் இசைக்குழுவான Take That உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இதுதவிர, இந்திய கிரிக்கெட், சினிமா மற்றும் ஃபேஷன் துறைகள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அரச தம்பதியினர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




