சமீபத்தில், நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை மெஹ்ரீன், தங்கள் திருமணம் இனி நடக்காது என்று பரபரப்பாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில், சுசீந்திரன் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால், விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டோ, தனுஷ் நடித்த பட்டாஸ் படங்களில் நாயகியாக நடித்தவர் மெஹ்ரின்.
தெலுங்கு, பஞ்சாபி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாவ்யா பிஷ்னோய் என்பவரை காதலித்து வந்தார். பாவ்யா, ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் பஜன் லாலில் பேரன். காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் தாங்கள் பிரிந்துவிட்டோம் என்றும் எங்கள் திருமணம் நடைபெறாது என்றும் மெஹ்ரின் திடீரென தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
நானும் பாவ்யாவும் எங்கள் நிச்சயதார்த்ததை ரத்து செய்கிறோம். எங்கள் திருமணம் நடைபெறாது. இந்த முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்திருக்கிறோம். இருவரின் நலன் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி பாவ்யாவுடனோ, அவர் குடும்பத்தினருடனோ எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன். இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால், அந்த சுதந்திரத்தை மதிப்பீர்கள் என நம்புகிறேன். நான் வழக்கம் போல நடிப்பு பணிகளைத் தொடர்வேன். இவ்வாறு மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.
நடிகை மெஹ்ரீனின் இந்த திடீர் அறிக்கை, சினிமா ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







