மேகதாது விவகாரம் விவாதிக்கப்படாது-காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நாளைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6-ம் தேதிகளில்…

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நாளைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6-ம் தேதிகளில் நடக்க இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று முறை தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்ட ஆணைய கூட்டம் நாளை மீண்டும் நடைபெற உள்ளது.

ஆனால் முன்னதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை ஆலோசிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடைகோரி தமிழ்நாடு அசரால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, நாளை நடக்கும் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இதனைதொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை ஒத்திவைக்க எந்த மாநிலமும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை, எனவே அறிவித்தபடி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என்றும், அதேபோல, மேகதாது அணை விவகாரம் குறித்து ஆணையத்தின் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படாது எனவும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாளை காலை 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில்,
தமிழகம் சார்பில் நிர்வளத் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.