மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதால், வீர வசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நடந்த தீ விபத்தில், கோயிலின் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன்காரணமாக, கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியைப் பழமை மாறாமல், ஆகம விதிப்படிப் புனரமைக்க கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது.
இதற்காக, 2021ல் சுமார் 18 கோடியே பத்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூண்களை செதுக்கும் பணி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் கடந்தாண்டு ஜூன் மாதம், வீர வசந்தராயர் மண்டபத்தைப் புனரமைக்கும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தற்போது வீர வசந்தராயர் மண்டபத்திற்கு தூண்கள் கொண்டுவரும் பணி தொடங்கியுள்ளது. அனைத்து தூண்கள், பாவு கற்கள் போன்றவை என்பதனால் அங்கிருந்து 6 லாரிகள் மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுவருகின்றது. பழமை மாறாமல் ஒவ்வொரு கல்தூணையும், கலை நுணுக்கத்துடன் வடிவமைத்து அதனை நிறுவுவதற்கான விழா மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கு பிறகு வீர வசந்தராயர் மண்டபத் திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








