தங்கள் பகுதியை கண்காணிப்பதற்காக சீனா மீண்டும் 26 இராணுவ விமானங்களையும் , 4 கடற்படைக் கப்பல்களையும் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி அனுப்பி ஊடுருவல் செய்துள்ளதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை ஒருமுறை கூட தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவை சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாகவே இன்றுவரை கருதுகிறது. தேவைப்பட்டால் ஒரு நாள் வலுக்கட்டாயமாகத் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும் சீனா தயாராகவே உள்ளதோடு, அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக தைவான் கடற்பகுதியில் தொடரும் பதற்றமான சூழ்நிலையின் ஒரு பகுதியாக தற்போது மீண்டும் சீனா தனது அத்துமீறலை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தைவானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல் படி, தைவானின் வான்வெளியில் சீனாவின் 26 PLA விமானங்கள் காணப்பட்டதாகவும். நான்கு செங்டு ஜே-10 போர் விமானங்கள், 4 ஷென்யாங் ஜே-16 போர் விமானங்கள், ஒரு சிஎச்-4 ட்ரோன் மற்றும் ஒரு ஹார்பின் பிஇசட்கே-005 ட்ரோன் ஆகியவை தைவான் கடல் பகுதியின் எல்லை கோட்டை தண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, ஹார்பினில் இருந்து மற்றொரு உளவு ட்ரோன் தைவானின் ADIZ இன் தெற்கு விளிம்பில் பறந்ததாகவும். இரண்டு ஷென்யாங் ஜே-16 போர் விமானங்கள், ஷான்சி ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம் மற்றும் BZK-007 உளவு ட்ரோன் ஆகியவை ADIZ இன் தென்மேற்கு மூலையில் காணப்பட்டதோடு, ஹார்பின் இசட்-9 நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டரும் தைவானின் தென்கிழக்குப் பகுதியில் காணப்பட்டதாக தைவான் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 26 சீன இராணுவ விமானங்கள் உட்பட 4 கடற்படைக் கப்பல்களும் தைவானை கண்காணிப்பதற்க்காக சீனாவால் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2020 செப்டம்பர் முதலே சீன ராணுவம் தொடர்ந்து தைவானை கண்காணிக்க விமானங்களையும், கப்பல்களையும் மாறிமாறி அனுப்பிவருவதாக கூறப்படும் நிலையில், இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 67 கடற்படைக் கப்பல்களையும், 266 இராணுவ விமானங்களையும் சீனா தைவானுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை சீன விமானம் ஊடுருவியதைக் கண்டு தைவானும் பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








