வாட்ஸ் ஆப்பில் தகவல் கொடுத்த 2 மணிநேரத்தில் வீடுதேடி மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் வீடுதேடி மருந்துகளை விற்பனை செய்ய மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மருந்து விற்பனையாளர்கள் இணைந்து வாட்ஸ் அப் மூலம் மருந்து விநியோகத்தை தொடங்கியுள்ளனர்.
மருந்து தேவை உள்ளவர்கள் முகவரியுடன் தகவல் கொடுத்த 2 மணிநேரத்தில் வீடுதேடி வந்து மருந்துகள் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கொரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும், எஞ்சியவர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார். மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







