உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இதுவரை உக்ரைனில் இருந்து ஆயிரத்து 200 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பியிருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் சூழலால் அந்நாட்டில் படித்த இந்திய மாணவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளதாக கூறியுள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பை தொடருவது சாத்தியமில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பை தொடர உடனடியாக உரிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு ஆதரவு அளிப்பதாகவும் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







