கச்சத்தீவை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி மறைவையொட்டி அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிப்பதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து அவரது மணைவி ராணி லட்சுமி நாச்சியாரையும் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருக்கோயில்கள், மசூதிகள் தேவாலயங்களுக்குள் ஒரு அரசு நுழைந்து இப்படித்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என கூற அருகதை இல்லை என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. ஆதீனங்கள் இவ்வாறு அரசின் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கும் நிலையில் தான் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி செய்து வருகிறது. இதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலை என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.
தமிழக பாஜக வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையை மறைத்து முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். எனவே ஆதாரங்களை இணைத்து அறிக்கையாக இன்று மாலை பாஜக வெளியிட உள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக அண்ணா நகர் எம்எல்ஏ மகனையும் மற்றும் திமுக குடும்ப ஆடிட்டரை காப்பாற்ற ஏன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார் என தெரியவில்லை அண்ணாமலை குற்றம்சாடியுள்ளார்.
மேலும், தமிழகத்தை பொறுத்த அளவு ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி சம்பாதிக்க வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.எனவே தான் ஜிஸ்கோயர் நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் தான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊடகங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து தகவல்கள் வெளியானதை அடுத்து உடனடியாக 6 புதிய நிறுவனங்களை ஆரம்பித்த அதன் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் இருக்கின்றனர். அந்த நிறுவனங்கள் குறித்து விரைவில் பாஜக மக்கள் மன்றத்தில் தகவல்களை தெரிவிக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது தமிழகத்தில் பெண் தனியாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது. ஆனால் தமிழக முதல்வர் ஏசி காருக்குள் அமர்ந்து கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்கிறார். இது ஏற்புடையது அல்ல. இது பொதுமக்களே ஏற்று கொள்ள முடியாத ஒரு தகவலாகவே இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்றால் ஏன்? 50 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று ஒரே நேரத்தில் தமிழக அரசு மாற்ற வேண்டும். முதல்வருக்கே தெரியும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று. திமுகவினர் காவலர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்யாமல் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகி தமிழக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றார்.
கச்சத்தீவை மீட்பது குறித்து சட்ட ஆலோசனைகள் நடைபெற்று அதற்கான விவரங்களை மத்திய அரசுக்கு தமிழக பாஜகவிற்கு அனுப்பி உள்ளது. விரைவில் அறிக்கை குறித்தான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் கூறிவிட்டு பின் கச்சத்தீவை மீட்பதற்கு வழி இல்லை என கூறுவது, தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையும் கிள்ளி விடுவது போல் உள்ளதாக என பாஜக தலைவர் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.








