பிரித்திவிராஜ், சூரஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜன கன மன.
தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் சபா என்கிற சபா மரியம் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்படுகிறார். அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் கொதித்தெழுந்து போராட, அது இந்திய அளவில் பேசுபொருளாக மாறி ஊடகங்களில் விவாதமாக உருவெடுக்கிறது.
இவ்வழக்கின் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக பொறுப்பேற்கும் துணை கமிஷனர் சஜ்ஜன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) 4 பேரை அதிரடியாக கைது செய்கிறார். ஆனால் அழுத்தம் காரணமாக இவ்வழக்கில் இருந்து சஜ்ஜன் குமார் திடீரென விடுவிக்கப்படுகிறார். வழக்கை நீர்த்துப் போக ஏற்பாடுகள் நடைபெறுவதை உணர்ந்து , 4 பேரையும் திடீரென என்கவுண்டர் செய்கிறார் சஜ்ஜன் குமார் . பொதுமக்கள் அவரை ஹீரோ என தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சஜ்ஜன் குமாருக்கு எதிராக வழக்கறிஞர் பிரித்விராஜ் ஆஜராகிறார். 4 குற்றவாளிகளையும் திடீரென என்கவுண்டர் செய்யக் காரணம் என்ன? பேராசிரியர் சபா மரியம் மரணத்தில் உள்ள மர்மம் என்ன? இவற்றிற்கு பின்னணியாக இருப்பது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
வழக்கமாக கமர்ஷியல் திரைப்படங்களில் அரசியல் கருத்துக்கள் பேசப்பட்டிருந்தாலும் அவை மேலோட்டமாகவே இருக்கும் .அத்தகைய படங்களில் ஹீரோக்கள் பேசும் வசனங்களில் அங்காங்கே அரசியல் கருத்துகளை தூவி இருப்பார்கள் . ஜன கன மன திரைப்படத்தில் வசனங்கள் எளிமையாக இருக்கின்றன . ஆனால் திரைப்படம் முழுவதும் சோஷியல் மீடியா ட்ரெண்டிங், போலி என்கவுண்டர், நிறுவனப் படுகொலைகள், சாதிய பிரச்னைகள்,பாலியல் வன்புணர்வுகளை இந்த சமூகம் கையாளும் விதம் என ஒரே ஒரு வழக்கு தொடர்பான விசாரணையில் பல விஷயங்களைப் சுட்டிக்காண்பித்து மற்ற கமர்ஷியல் படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது ஜன கன மன.
2019ஆம் ஆண்டு ஐதராபாத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை அதே இடத்தில் என்கவுண்டர் செய்தனர் போலீசார். அந்த சம்பவத்தை திரைப்படம் அப்படியே படம்பிடித்து காட்டுகிறது. ஐதராபாத் வழக்கில் நடந்தது போலி என்கவுண்டர்தான் என அண்மையில் தீர்ப்பு வெளிவந்ததும் இந்த படத்தை பார்க்கும் போது நினைவில் வருவதை தவிர்க்க முடிவதில்லை.
பெண்கள் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை காவல்துறை ,ஊடகம் ,அரசு எப்படி கையாளக் கூடாது என தெளிவான பாடத்தை ஜன கன மன பேசுகிறது. கதையில் பேராசிரியர் மரியத்தை கொன்றதாக காவல்துறையினரினால் ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட 4 பேர் . அந்த 4 பேர் தான் மகளை பாலியல் வன்புணர்வு செய்து எதிர்த்துக் கொன்றவர்கள் என அந்த தாய் மட்டுமல்ல ஒரு நல்ல பேராசிரியரை இழந்த கோபத்தில் மாணவர் சமூகமும் அந்த 4 பேருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என நினைக்கிறது. மகளை பறிகொடுத்த தாயிடம் ஹீரோ ப்ரித்விராஜ் ,”உங்கள் மகளை பாலியல் வன்புணர்வு செய்ததை நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்தீர்களா ? என்ற கேள்வி அதிரச் செய்தாலும், இயல்பாக தினந்தோறும் காவல்துறையினர் வெளியிடும் குற்றவாளிகள் என்பவர்களுடைய புகைப்படங்கள் அதனை வெளியிடும் ஊடகங்கள் என பாலியல் வன்புணர்வு செய்திகளை இப்படித் தானே கடக்கிறது சமூகம் என்பதை சுட்டிக் காண்பிக்கிறது இத்திரைப்படம். ஆனால் பாலியல் வன்முறை சம்பவங்களை இப்படி கடப்பது எவ்வளவு தவறானது என்பதையும் இயக்குனர் தெளிவாக சொல்லி இருக்கிறார் .
பேராசிரியர் சபா மரியம் கொல்லப்பட்டதற்கு பின்னால் இருந்த காரணமும் அரசியலும் வேறு . ஆனால் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி பரப்பப்படுகிறது . உடனே ஒட்டு மொத்த சமூகமும் இறந்த பேராசிரியருக்கு நீதி கேட்டு போராடுகிறது. தினமும் நாட்டில் பாலியல் வன்புணர்வு செய்து இறக்கும் எத்தனை பெண்களுக்காக போராடுகிறோம் ஏன் பேராசிரியர் மரியத்திற்கு மட்டும் போராட்டம் , நீதி வேண்டும் என்ற குரல் எழுப்பப்படுகிறது? ஏன் பாதிப்புக்குள்ளான மற்ற பெண்களுக்கு இத்தகைய குரல்கள் எழுப்பப்படுவதில்லை ? என்று ஹீரோ ப்ரித்விராஜ் கேட்கும் கேள்விக்குள் இருப்பது அனைத்து பாலியல் வன்புணர்வு கொடுமைகளையும் ஒரே மாதிரியாக இந்த சமூகம் கையாள்வதில்லை என கேள்வி எழுப்பிகிறது. கூடவே ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றாலே பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாள் என திசை திருப்புவது என்பது பாலியல் வன்புணர்வு செய்ததைப் போன்றே கொடுரமான ஒன்று என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். பாலியல் வன்புணர்வு என்ற காரணத்தை கொண்டு மற்ற தவறுகளை மறைப்பது பொது மனநிலையில் பெண்கள் மீதாக நடைபெறும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமையை எளிதாக ஏற்றுக் கொள்கிறதா இந்த சமூகம் என்ற கேள்வியை ஆணித்தரமாக எழுப்புகிறது இத்திரைப்படம் .
கிராமத்திலிருந்து தடைகளைத் தாண்டி படித்து முன்னேறி பி.ஹெச்டி ஆய்வை மேற்கொள்ளும் வித்யா என்னும் மாணவி, பல வருடங்களாக ஆய்வை சமர்பிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார். ஒருநாள் அதற்கான முறையான காரணத்தைக் கேட்கும்போது ,சாதி ரீதியாக அவரை இழிவுபடுத்துகிறார் ஆதிக்க மனோபாவம் கொண்ட பேராசிரியர். கடுமையான மன உளைச்சலில் கு நியாயம் கேட்ட பேராசிரியர் சபாஉயிரை மாய்த்துக் கொள்கிறார் மாணவி . அது அப்படியே மூடிமறைக்கப்படுகிறது. அவளுக் மரியம் கொல்லப்படுகிறார் . இவ்வாறாக இந்திய கல்வி நிறுவனங்களில் Institutional Murders எனப்படுகின்ற நிறுவனப் படுகொலைகள் எப்படி நடைபெறுகிறது? கல்வி நிறுவனங்கள் எப்படி இன்றும் சாதியப் பாகுபாடுகளோடு செயல்படுகிறது என்பதனை தோலுரித்து காட்டுகிறது இத்திரைப்படம் . கூடவே நடப்பு அரசியலான ஹிஜாப் சர்ச்சை , ஜாமியா மில்லியா பல்கலைகழகம் மற்றும் ஜேஎன்யூவில் மாணவர்களிடையே நடைபெற்ற கலவரங்களை பல அரசியல் குறியீடுகளோடு படத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குனர். கூடவே அரசியல் கட்சிகளால் தூண்டப்பட்டு மாணவர்களிடையே ஏற்படும் வன்முறைகளையும் அதனால் மாணவர்களுக்கு உள்ளாகும் பாதிப்பையும் தொட்டுச் செல்கிறது இத்திரைப்படம் . இதனை சிறப்பான திரைக்கதையின் மூலம் இயக்குனர் திஜோ ஜோஸ் சமூகத்துக்கு சிறந்த பாடத்தை எடுத்திருக்கிறார்.
குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் போது தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் தற்காப்புக்காக சுட்டேன் என்பதுதான் என்கவுண்டருக்கு காவல்துறையினர் முன்வைக்கும் பொதுக் காரணமாக உள்ளது. வழக்கு தீர விசாரிக்கப்படுவதற்கு முன்பே இவர் தான் குற்றவாளி அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற என்கவுண்டர்களுக்கு ஆதரவாக இருக்கும் கூட்டு மனநிலையினை தீரமாக கேள்வி எழுப்புகிறது இத்திரைப்படம் . அதே போன்று என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரிகளை ஹீரோவாக பார்த்து அவரை கொண்டாடக்கூடிய மனநிலையும் பொதுச் சமூகத்தில் உள்ளது. ஐதராபாத் என்கவுண்டர் நடந்தபோது கூட போலீசார் மீது மக்கள் பூத்தூவி வரவேற்றிருந்தனர். இதையெல்லாம் இத்திரைப்படம் உடைத்து பேசுகிறது.
அஜ்மல் கசாப் என்கிற மிகப்பெரிய பயங்கரவாதியே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்புதான் தூக்கிலிடப்பட்டான். தண்டனை என்பது சட்டம், நீதிமன்றம் மூலமாக வழங்கப்பட வேண்டுமே தவிர, தீர விசாரிக்கப்படாமலேயே சட்டத்தை தன் கையில் எடுத்து ஒருவரை என்கவுண்டர் செய்வது தவறானது என பிரித்திவிராஜ் பேசும் வசனம் கவனிக்க வைக்கிறது.

சமூக ஏற்றத் தாழ்வுகள் சட்டத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் வெளிப்படுதுகிறது இத்திரைப்படம். சமூகத்தின் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள், அவர்களின் தோற்றத்தை வைத்து குற்றமே செய்யாவிட்டாலும் அவன் குற்றவாளி என்பதும், அவனை என்கவுண்டர் செய்வதை பாராட்டுவதையும் . அதுவே செல்வாக்குள்ள ஒரு நபர் குற்றவாளியாக இருந்தால் அந்த விஷயம் மூடிமறைக்கப்பட்டு மறக்கடிக்கப்படுவதையும் கேள்விக்குட்படுத்துகிறது. சட்டம் என்பது சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என அழுத்தமாக சொல்கிறது திரைப்படம்.
அதுபோலவே சோஷியல் மீடியா ட்ரெண்டிங் எவ்வாறு உருவாகிறது, அது ஏற்படுத்தும் விளைவுகளையும் சொல்கிறது. குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மூடி மறைக்க இன்னொரு விஷயத்தை பூதாகரப்படுத்தி பேசுபொருளாக்கினால், அதனை மறந்துவிட்டு, இதனை பேச ஆரம்பிக்கும் மந்தை மனநிலையையும் படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் . இப்படியாக இதுவரை திரைப்படங்களில் பேசப்படாத விஷயங்கள் அனைத்தையும் ஒரே கதையில் ஒன்றிணைத்து, படத்தின் இறுதி நிமிடம் வரை நேர்த்தி குன்றாமல் சுவாரஸ்யமாக திரைக்கதை கொண்டு சென்றதற்கு “ஜன கன மன” இயக்குனர் திஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் , இடைவேளைக்கு பிறகு படத்தில் தோன்றி படம் முழுவதும் நிறைந்திருக்கும் உணர்வை நடிப்பின் மூலம் ஏற்படுத்திய ஹீரோ ப்ரித்விராஜூக்கும் பாராட்டுகள்.
- த.எழிலரசன்







