திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக…!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு, கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் 27.06.2026 சனிக்கிழமை சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2

சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடையநல்லூர் மற்றும் சீர்காழி தொகுதிகளில் போட்டியிட்ட திரு. தி.மு.இராசேந்திரன், திரு இரா.செந்தில்செல்வன் ஆகியோரை ஆதரித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், களப்பணியாற்றிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 3

தமிழ்நாட்டின் தனித்துவ சிறப்புகளை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மறுமலர்ச்சி திமுக பொது குழு ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 4

தமிழ்நாடு அரசு மேகேதாட்டு அணைப் பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப் பெறுவதுடன், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில் விவசாய சங்கங்களையும் பங்கேற்கச் செய்து கருத்துக்களைக் கேட்டு கலந்தாய்வு செய்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என்று கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 5

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தமிழ்நாட்டில் இதுவரை கடைபிடிக்கப் பட்டு வந்த இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதில் உறுதியாக இருப்பதுடன், ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கல்வி நிதியைப் போராடி பெற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 6

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கடந்த தி.மு.க ஆட்சியில் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தீர்மானத்துக்கு ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இனியும் மாணவர்களின் தற்கொலைகள் தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வு தேசிய அளவில் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 7

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் கடந்த ஆட்சி காலத்தில் உரிமங்கள் வழங்கப்பட்டு மதுபான கடைகள் தாராளமாக இயங்கி வருகின்றன. அவற்றையும் மூடுவதுடன், படிப்படியாக மதுபான கடைகள் அனைத்தையும் மூடி முழு மதுவிலக்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 8

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதால், உர விலை உயர்ந்தால் அது நேரடியாக மளிகைப் பொருள்களின் விலையையும் உயர்த்தும் என்று அஞ்சப்படுகிறது. எனவே ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் யூரியா ,உரம் விலையை கட்டுப்படுத்த வேண்டுமென்று கழகப் பொது குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 9

இந்திய நிறுவனங்கள் கடந்த மே 15ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தத் தொடங்கின. இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ,அமெரிக்கா -ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணம் என்று கூறுகின்றன. தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர் என வரலாற்று உச்ச விலையில் இருந்து 30 சதவீதம் சரிந்துவிட்டது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்பது தான் கோடிக்கணக்கான சாமானிய மக்களின் கேள்வி. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று கழக பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 10

பருத்திக்கு தற்காலிக வரி விலக்கை, சீசன் அல்லாத காலங்களில் தொழில்துறையினர் பயனடையும் வகையில் நிரந்தரமாக அறிவிக்க வேண்டும்” என்று ஜவுளி தொழில்துறையினர் விடுத்துள்ள கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என கழகப் பொது குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 11

1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் போராடிய பொழுது பொள்ளாச்சி நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
இந்த தியாகத்தை போற்றும் வண்ணம்- ஆதிக்க இந்தியை எதிர்த்து அன்னை தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு பொள்ளாச்சி நகரில் மொழிப்போர் அருங்காட்சியகம் நூலகத்தோடு கூடிய மொழிப்போர் மணிமண்டபம் அமைத்து மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுக் குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 12

கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் தேங்காய்க்கு தமிழ்நாடு அரசு 1 விழுக்காடு செஸ் வரி வசூல் செய்து வருகிறது..
கேரளா, கர்நாடகம் போன்ற தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் தேங்காய்க்கு செஸ் வரி இல்லை .
மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை நீக்கியதை போல அழுகும் பொருளான தேங்காய் மீதான செஸ் வரியை நீக்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என கழக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 13

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களது கனவுகளையும் சிதைத்து விட்டன. நம் ஜனநாயகத்தின் மிக முக்கியமான கூறான பொதுக் கல்வி, தகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மோடி அரசு முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது. உயர்மட்ட அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் விதிகளில் மாற்றம் செய்திருக்க முடியாது. அதனால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை குறித்து குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சுதந்திரமான நீதித்துறை அல்லது வல்லுநர் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 14

விவசாயிகளின் பல மாத உழைப்பின் பலனாக விளைந்த நெல் மூட்டைகள், இப்படி மழையில் நனைந்து சேதமாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மழை காரணமாக திறந்த வெளியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் சேதமடைந்தால் அரசுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாகவும், இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க நிரந்தர சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கவலையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 15

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக போராடி உத்தரவு பெற்றுத் தந்த கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு பொதுக்குழு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 16

முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு, அரசுத்துறைகளில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் நிரப்பப்படும் என்று அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 17

தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கி, காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் அவர்களை நிரந்தரமாக நியமிக்கவும், 2020-ஆம் ஆண்டு கேங்மேன் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஐந்தாயிரம் பேரை கேங்மேன்களாக பணியமர்த்துவதற்கு தமிழக அரசும், தமிழ்நாடு மின்வாரிய நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 19

தமிழ்நாடு அரசு,வேதாந்தா குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது. சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கக் கூடாது என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 20

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்களை அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 21

ஒன்றிய பாஜக அரசு ,தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப் படுவதையும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடி படகுகள், கருவிகளைப் பறிமுதல் செய்வதையும் தடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 22

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள நீண்ட, மத்திய கால கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 23

என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மீண்டும் விற்பதற்கு ஒன்றிய பாஜக அரசு முனைந்திருப்பது கண்டனத்துக்குரியது. என்எல்சி நிறுவன பங்குகள் விற்பனையைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.