ஒருமையில் பேசியதாக நினைப்பதைவிட உரிமையில் பேசியதாக தான் நினைக்கிறேன் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு பெரும் விவாதப் பொருளானது. தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை யம்மா… பேசும்மா… இங்க வாம்மா என்றெல்லாம் பேசினார். ஒரு மேயருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா. மேயரை மதிக்காமல் மிரட்டும் தொனியில் அமைச்சர் கடுமையாகப் பேசுகிறார் என சர்ச்சையான நிலையில் அதுதொடர்பாக தற்போது மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், அமைச்சர் என்னை செய்தியாளர்களை சந்திக்கச் சொன்னது சாதாரண ஒரு நிகழ்வுதான். அமைச்சர் கே.என் .நேரு என்னை மிரட்டவோ, இல்லை கடுமையான வார்த்தைகளாலோ பேசவில்லை. எல்லா இடங்களிலும் என்னை மதிக்கக்கூடியவர். நல்ல முறையில் அவருடைய பொண்ணு போல் என்னைப் பார்த்துக் கொள்வார்.
அமைச்சர் ஒருமையில் பேசியதாக நினைப்பதைவிட நான் உரிமையில் பேசியதாக தான் நினைக்கிறேன். கட்சியில் மிகவும் மூத்தவர் என்பதோடு எங்கள் துறையின் அமைச்சர் அண்ணன் கே.என் நேரு. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மேயர் ஆகிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி தொடர்பாக நான் எந்த பணியை முன்னெடுத்துச் சென்றாலும் மிகுந்த ஆதரவோடு இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. இதுவரை நான் கேட்டு எதுவும் வேண்டாம் என்று சொன்னதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








