எம்.ஜி.ஆரின் பிம்பம் தோன்றும் திரையை தொட்டுப்பார்த்தே மெய்சிலிர்க்கும் லட்ச கணக்கான தொண்டர்கள் இருக்கும்போது நிஜத்தில் அவரது தோளில் சாய்ந்து உறங்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?. அந்த பாக்கியசாலிதான் மாயத்தேவர். ராசிக்காரர் என எம்.ஜி.ஆரால் புகழப்பட்டு, தனது பிறந்த நாள் அன்று காலையில் இவர் முகத்தில்தான் விழிப்பேன் என எம்.ஜி.ஆரால் கொண்டாடப்பட்ட மாயத் தேவர், அதிமுகவின் முதல் வெற்றி வேட்பாளர்.
திமுகவை விட்டு விலகிய எம்ஜிஆர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ந்தேதி அதிமுகவை தொடங்கிய பின், ஆளுங்கட்சியால் எழுந்த சவால்களை மீறி தமது கட்சியை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருந்த காலம் அது. கே.ஏ.கிருஷ்ணசாமி, மோகனரங்கம் உள்ளிட்ட அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டுவர முன்னணி வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடியும், ஜாமீன் கிடைக்கவில்லை.
கட்சியின் முன்னணி தளகர்த்தாக்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் சிறையில் இருக்கும் நிலையில் கட்சியின் எதிர்காலம் குறித்து எம்.ஜி.ஆர் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். வேறு திறமையான, இளம் வழக்கறிஞர் ஒருவரை கூட்டிவாருங்கள், என தனது கட்சியினரிடம் கேட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவர் முன்பு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களால் ஒருவர் அழைத்துவரப்பட்டு நிறுத்தப்படுகிறார்.
அவரைப் பார்த்ததும் எம்.ஜி.ஆரின் முகம் மலர்கிறது. ”அட மாயன் நீங்களா ” என மகிழ்ச்சியடைகிறார். ஆம். அந்த நபர் அதிமுகவின் ஆணிவேர் என பிற்காலத்தில் எம்.ஜி.ஆராலேயே அழைக்கப்பட்ட மாயத் தேவர். எம்.ஜி.ஆருக்கும் மாயத் தேவருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தது. தனது தாய்மாமன் நல்லுத்தேவர் கொலை வழக்கு தொடர்பாக மாயத் தேவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாட சென்றபோது, எம்.ஆர்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கின் விசாரணைக்காக எம்.ஜி.ஆரும் அடிக்கடி அங்கே வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் தன் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் அதிமுகவின் முன்னணி தளகர்த்தாக்களான கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், ஏராளமான தொண்டர்களுக்கும் தனது சிறப்பான வாதத் திறமையை பயன்படுத்தி ஜாமீன் பெற்றுத் தந்தார் மாயத்தேவர். இப்படி எம்.ஜி.ஆர் மனதில் ஆழப்பதிந்த மாயத் தேவர் பின்னர் அதிமுகவிலும் ஐக்கியமானார்.
கட்சி ஆரம்பித்த சுமார் 6 மாதத்தில் அதிமுக தனது முதல் பலப்பரிட்சை களத்தை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் சந்தித்தது. திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த ராஜாங்கம் இருந்துவிட அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தலாமா, வேண்டாமா என பல வாத பிரதிவாதங்கள் நடத்திய பிறகு, கட்சியின் பலத்தை நிரூபிக்க நல்ல வாய்ப்பு என்பதால், இடைத்தேர்தலை சந்திப்பது என முடிவு செய்தார் எம்ஜிஆர். தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என எம்.ஜி.ஆர். சிந்தித்தபோது அவர் மனதில் மாயத்தேவரின் உருவம் வந்து நின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றிய அவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஜாமீன் கிடைக்க செய்த உதவி ஒருபுறம் காரணமாக இருந்தாலும், படிக்கும் காலத்திலிருந்தே மாயத்தேவருக்கு இருந்த சமூக செயற்பாடு, மக்கள் சேவை ஆற்றுவதில் அவருக்கு இருந்த ஆர்வம், அதன் மூலம் அவர் பெற்றிருந்த நற்பெயர் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு மாயத்தேவரை அதிமுகவின் முதல் வெற்றி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர். தேர்தலில் செலவு செய்ய தன்னிடம் போதுமான பணம் இல்லையே என மாயத் தேவர் தயங்கியபோது, உன்னால் முடிந்ததை செலவு செய், மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் எனக் கூறி உற்சாகம் ஊட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இப்படி அதிமுகவின் முதல் வெற்றி வேட்பாளராக அதிமுக சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்ற மாயத் தேவர், அக்கட்சியில் மற்றொரு மகத்தான தொடக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். ஆம். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவை ஆட்சியில் அமர்த்திய தேர்தல் வெற்றிகளை ஈன்றெடுத்த வெற்றி சின்னமான இரட்டை இலை மாயத்தேவரால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
1973ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது அதிமுக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்ததால் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டியிருந்தது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆட்சியராகவும் அம்மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருந்த சிரியாக், சுயேட்சை சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்காக 16 சின்னங்கள் அடங்கிய பட்டியலை மாயத்தேவரிடம் வழங்கினார். அதை வாங்கிப்பார்த்த அவர், ஒவ்வொரு சின்னமாக பார்த்தபடி வந்தார். அந்த பட்டியலில் 7ஆவது இடத்தில் இருந்த இரட்டை இலை சின்னம் மாயத்தேவரை வெகுவாக கவர்ந்தது. இதை எம்.ஜி.ஆரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். மக்களை அதிகம் ஈர்க்கும் எத்தனையோ நல்ல சின்னங்கள் இருக்க இந்த சின்னத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார் மாயத் தேவர் என எம்.ஜி.ஆர் முதலில் தயங்கியிருக்கிறார். அப்போது அவர் அளித்த விளக்கம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.
இரண்டாம் உலகப்போரின்போது கிடைத்த வெற்றியை பிரிட்டன் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் தனது இரண்டு விரல்களை காண்பித்துதான் பொதுமக்களிடம் சுட்டிக்காட்டினார். வெற்றியின் அடையாளமாக வி என்கிற எழுத்தை குறிக்கும் வகையில் இரட்டை விரலை காண்பிப்பது வழக்கம். இரட்டை இலை சின்னத்தையும் இவ்வாறு நீங்கள் இரட்டை விரல்களை காண்பித்து மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும் என மாயத் தேவர் கூறிய விளக்கம் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்க உடனே சம்மதித்துவிட்டார்.
திண்டுக்கல் இடைத் தேர்தலில் 2.6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிமுகவிற்கு முதல் வெற்றிக்கனியை பறித்துக்கொடுத்தார் மாயத் தேவர். அவர் தேர்ந்துகொடுத்த இரட்டை இலை சின்னம் பின்னர் கட்சியின் நிரந்தர சின்னமாகி தமிழ்நாடு அரசியலின் முக்கி அடையாளங்களுள் ஒன்றாக மாறியது.
அதிமுக சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றவர் என்பதால் மாயத் தேவர் மீதும் மிகுந்த அன்பும் பாசமும் வைக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக அவர் ராசியான நபர் என்கிற எண்ணம் எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாகப் பதிந்தது. இதனால் தனது பிறந்தநாளான ஜனவரி 17ந்தேதியும், புத்தாண்டு அன்றும் காலையில் எழுந்திருக்கும்போது மாயத்தேவர் முகத்தில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஒருமுறை எம்.ஜி.ஆருடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது இரவெல்லாம் கண் விழித்த அசதியில் எம்.ஜி.ஆரின் தோளில் சாய்து தூங்கியிருக்கிறார் மாயத்தேவர். ஆனால் அவரை எழுப்பாத எம்.ஜி.ஆர் அப்படியே தனது தோளில் தூங்கவிட்டுவிட்டார். பிரச்சாரம் செய்ய வேண்டிய இடம் வந்ததும்தான் கையில் டீ கப்புடன் அவரை எழுப்பி தேநீர் அருந்த சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். தொண்டர்களிடம் பாசமிக்க தலைவனாக விளங்கியதற்கு உதாரணமாக மாயத்தேவர் இந்த சம்பவத்தை அடிக்கடி கூறி நெகிழ்ச்சி அடைவதுண்டு.
இப்படி எம்.ஜி.ஆரால் பாசம் காட்டப்பட்ட மாயத் தேவர் அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தருணமும் அரங்கேறியிருக்கிறது. 1977ம் ஆண்டு அப்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்தது அதிமுக. காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தியை அற்ப காரணங்களுக்காக மொரார்ஜி தேசாய் கைது செய்வதை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார் மாயத்தேவர். கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சியின் செயலை விமர்சித்தது எம்.ஜி.ஆருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் மாயத்தேவரை வேறு வழியின்றி 10 நாட்களுக்கு அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திலும், அவர் உருவாக்கிய அதிமுகவின் பயணத்திலும் இரண்டற கலந்த மாயத்தேவர் 1973ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டுவரை சுமார் 10 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராக இருந்து சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்துள்ளார். 1973ம் ஆண்டு இடைத் தேர்தலிலும், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் திண்டுக்கல் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாயத்தேவர், 1980ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று திமுக உறுப்பினராக மக்களவைக்கு சென்றார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டவர்கள் இவரை ”மாயன், மாயன்” என அன்போடு அழைத்து நட்பு பாராட்டுவதுண்டு. 1934ம் ஆண்டு உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் பிறந்து வழக்கறிஞராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறந்து விளங்கி புகழ்பெற்ற மாயத்தேவர் தனது 88வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மறைந்துவிட்டாலும், முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர், இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தவர் என்ற அவரது பெருமைகள் அதிமுகவின் சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.







