வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி, கோயில் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும், நாட்டாண்மையாக இருப்பவர் முடிவு செய்து தேதி கூறிய பிறகு தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதேபோல், நாட்டாண்மை வந்து தாலி எடுத்து கொடுத்த பிறகே திருமணம் நடக்கும் சம்பிரதாயம் இருக்கிறது.
இந்நிலையில், வெள்ளக்கல் மலைக்கு நாட்டாண்மையாக சேகர் என்ற சங்கர் (39) இருந்து வந்தார். இவரது அண்ணன் மகன் வசந்த் என்பவருக்கும், ஜமுனா முத்தூர் அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை வெள்ளக்கல் மலையில் உள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, இந்த திருமணத்தில் தாலி எடுப்பதற்காக கடந்த 5-ம் தேதி நாட்டாண்மை சேகர் மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஊருக்கு வந்தனர். பின்னர் சிவநாதபுரம் மலையடிவாரம் வரும்போது, அங்கிருந்த வேலூர் எஸ்பி தனிப்படை போலீசார் சாராயம் விற்பது தொடர்பாக சேகரை மடக்கி விசாரணைக்காக அரியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் பின்னர், சாராய வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று சேகரை விடுவிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரை விடுவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த கிராமத்தில் நாட்டாண்மை கைது செய்யப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்ட நிகழ்வு இதுவே முதல்முறை என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது, “சாராய வழக்கில் சேகர் கைது செய்யப்பட்டு இருப்பதால், அந்த பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட உள்ளார். மேலும், வேறு ஒருவர் புதிதாக நாட்டாண்மையாக நியமிக்கப்படும் வரை அந்த கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்காது. தற்போது நிறுத்தப்பட்ட இவர்களது திருமணமும் புதிய நாட்டாண்மை வரும் வரை நடத்தமாட்டார்கள்.
நாட்டாண்மை மீண்டும் இவரோ அல்லது வேறு ஒருவரோ வருவது என்றால் 18 நாட்டாண்மைகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்ட பிறகு தான் நாட்டாண்மையாக செயல்பட முடியும்” இவ்வாறு தெரிவித்தனர்.