செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என செந்தில்பாலாஜி தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீதிமன்ற காவலில் தொடர்ச்சியாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி, மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது கடந்த சில வாரங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில் நீதிபதி நிஷாபானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும் அவரை ஜாமீனில் விடுவிக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.இன்னொரு நீதிபதியான பரத சக்ரவர்த்தி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் எனவே ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்ததால் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கின் மீதான விசாரணையை 3-வது நீதிபதி நடத்தி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் தனது விசாரணையை நீதிபதி சி.பி.கார்த்திகேயன் தொடங்கினார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ஆஜராகி வாதாடினார்.
அப்போது, குற்றம் மூலம் பெற்ற பணத்தை செந்தில் பாலாஜி வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது இவ்வாறு கபில் சிபில் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். அதோடு, நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் வினவினார்.
இதற்கு பதில் அளித்த கபில் சிபில் இதுசம்பந்தமாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் எனக் குறிப்பிட்டார். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது முதல் நடந்த நிகழ்வுகளை தேதி வாரியாக விளக்கி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, முதல் 15 நாட்கள் முடிந்த பின், காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது என, பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். அதோடு, ஆரம்பம் முதல் அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய கபில் சிபல், நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது எனவும் வாதிட்டார்.
இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் வாதத்தை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கைது நடவடிக்கை, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர்.
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிபதிக்கு அமலாகத்துறை மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது இவ்வாறு என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.
இந்நிலையில், மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளைக்கு தள்ளிவைத்தார். அப்போது மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் தொடர உள்ளது.







