மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மராத்தா பிரிவினர் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், முந்தைய பாஜக அரசு 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் இது இருப்பதால் இந்த மராத்தா இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன், தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.
மராத்தா பிரிவினருக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு, அரசியல் சாசன பிரிவுக்கு எதிரானது எனக்கூறி நீதிபதிகள் ரத்து செய்தனர். இருப்பினும் எந்தெந்த சமுதாயங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கலாம் என்பது குறித்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே உண்டு என்ற அரசியல் சாசனத்தின் 102வது திருத்தத்தை உறுதி செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த சாதிகளை சேர்க்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே என்ற 102வது திருத்தத்தை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய எந்த முகாந்திரத்தையும் காண முடியவில்லை எனக்கூறி மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து 102வது சட்டதிருத்தம் தொடர்பான தீர்ப்பை உறுதி செய்தது.