விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், கைதான 11 பேரை 3 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியர்குப்பத்தில், கடந்த 13-ம் தேதி விஷ விசாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து 11 பேரை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த போலீசார் சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வழங்கிய புதுச்சேரி ராஜா என்கிற பரகத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையிலிருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 11 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கினை விசாரிக்க சிபிசிஐடி டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியும், செங்கல்பட்டு விசாராணை அதிகாரியாக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் 3 நாள்கள் விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கில் கைதான 11 பேரையும் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி எம்.புஷ்பராணி 11 பேரிடம் 3 நாள்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவர்களை வரும் மே 26-ம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் 11 பேரையும் பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் காகுப்பம் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர்.







