நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் அதிமுகவில் நிலவிய சலசலப்பு காரணமாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
இதனால் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. இதனைத்தொடர்ந்து அக்.9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். அவர் 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்றார். இதனால் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகள் பெற்றார்.
இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெர்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.




