தமிழக வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான உறவு அவசியம்! – வானதி சீனிவாசன்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைகள் குறித்து பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கொள்கைகள் வேறாக இருக்கலாம்; கூட்டணிகள் வேறாக இருக்கலாம், ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் மக்கள் நலனையும், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தன. மேலும் தமிழ்நாட்டின் மீதான பிரதமரின் அக்கறையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசின் பங்களிப்பும் இந்நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டன.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது உரையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், நான்கு வழிச்சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பட்டியலிட்டு, பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்தது வரவேற்கத்தக்கது. மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முன்னெடுப்பதும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து நிறைவேற்றுவதும் காலத்தின் தேவையாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.