பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா. தனது சீரிய நடிப்பால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்காத கலைஞன். 69 வயதான நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவுக்கு பல்வேறு திரைநட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/rajinikanth/status/1653672824358457348?t=iiFnfMSAJp5s_yWmZuM9UQ&s=08
இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/offBharathiraja/status/1653672473668509703?t=FbOIovdWTrexSMN_sb4YoA&s=08
மனோபாலாவின் மறைவு குறித்து நியூஸ் 7 தமிழுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்த நடிகர் வடிவேலு, “நடிகர் மனோபாலாவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது; அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். நடிகர் மனோபாலாவின் மரணம் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
இசையமைப்பாளர் இளையராஜா, “நடந்த நிகழ்வுகளை அவ்வப்போது என்னுடன் பகிர்ந்து, என்னை ,மகிழ்ச்சிப்படுத்துவார். அவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பரிணமித்தவர். அவருடைய இழப்பு திரைத்துறையில் மறக்கமுடியாத ஒரு இழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.
நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “மனோபாலா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இயக்குநரும் நடிகரும் இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர், “மனங்கவர் மனோபாலா மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மனோபாலாவின் மறைவு குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த நடிகர் தம்பிராமையா, “நடிகர் மனோபாலா இறப்பு மிகப்பெரிய இழப்பு. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா; உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக் மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்து இறப்பது கொடுமையானது” என்று தெரிவித்தார்.
நடிகர் சிங்கமுத்து நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், “மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். வரிசையாக சினிமா பிபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லோருக்காகவும் முன்நிற்பார் அவர்” என்று இரங்கல் தெரிவித்தார்.








