மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பி.சி சான்றிதழ் கிடையாது : உச்சநீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

தூத்துக்குடி தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக்கொண்டார். இதைதொடர்ந்து, தனக்கு “முஸ்லிம் லெப்பை” என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பரமசிவம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிச் சான்றிதழ் குறித்து தமிழக அரசு கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் மனுதாரர், “பிற்படுத்தப்பட் முஸ்லீம்” என சாதிச் சான்றிதழ் கோரியிருக்கிறார். அந்த அரசாணைப்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பட்டியல் சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் மதத்துக்கு மாறும்போது, குறிப்பிட்ட 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறினால் அவர்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய ஆணைப்படி இஸ்லாம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார். அவரை குறிப்பிட்ட பிரிவுக்குள் சேர்க்க முடியாது, குறிப்பாக பிறப்பின் மூலமான சமூகத்தில் சேர்க்க முடியாது என்பதாகவே கருத முடியும். அதனடிப்படையில், தமிழக அரசின் ஒரு அரசாணையால் உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது, எனவே, 2024ம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனக்கூறி அரசாணை ரத்து செய்த்தோடு, இஸ்லாம் மதத்துக்கு மாறியவர் ஒரு முஸ்லிம் மட்டுமே, எனவே அவர் “பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்” எனச்சாதிச் சான்றிதழ் கோர முடியாது எனவும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச்சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்ஹி மற்றும் சித்தார்த் லூத்ரா ஆஜராகி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சாதியினர் ஆகியோரில் இஸ்லாத்தைத் தழுவிய தகுதியுள்ள நபர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் என்ற சமூகச் சான்றிதழ்களை வழங்க அதிகாரம் உள்ளது.

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இட ஒதுக்கீட்டுப் பலன்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதும், அதன் மூலம் மதம் மாறினாலும் இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பாதுகாத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவதுமே அரசாணையின் நோக்கம் என தெரிவித்தனர் மேலும், தமிழக அரசின் அரசாணை என்பது மத அடிப்படையிலான சலுகையோ, விலக்கலோ அல்ல என்றும் பின்தங்கிய வகுப்பினர் என்ற தனித்துவமாக வகைப்படுத்துவதற்கானது மட்டுமே எனவும் வாதிட்டனர்.

வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச்சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையையே உறுதி செய்து அதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.