டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. திகார் சிறையில் இருந்த அவரை மார்ச் 10 – ஆம் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறை 12 நாள் விசாரித்தது. இதை அடுத்து அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாததால், உடன் இருந்து கவனிக்க இடைக்கால ஜாமின் கேட்டு மணீஷ் சிசோடி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனக்கூறி அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா மருத்துவமனையில் உள்ள ஷீமா சிசோடியாவை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு அனுமதி கொடுத்தார்.
அதே நேரத்தில் மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். இந்நிலையில் ஷீமா சிசோடியா எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அவரது உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவரை கொண்டு கண்காணிக்க வேண்டும் என நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.