தண்டவாளங்களை பராமரிக்க உரிய நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அவை முறையாக செலவு செய்யப்படவில்லை என 2022ல் வெளியான சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 301பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், நேற்றிரவு இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன.
ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு முறையான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் 2022ல் வெளியான சிஏஜி அறிக்கையின்படி ரயில்வே துறையில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.
2022ல் வெளியான சிஏஜி அறிக்கையில் கடந்த 2019-20 காலகட்டத்தில் கிழக்கு ரயில்வேயில் ரயில் தண்டவாளங்களை பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வெறுமனே 3% மட்டுமே செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு நிதியான RRKS நிதியில் 2017-18 காலகட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு 1லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டது. கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 1127 ரயில்கள் தடம்புரண்டுள்ளன. இவற்றில் அதிகமாக தண்டவாளங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோல ஒதுக்கப்பட்ட ரயில்வே நிதியில் 2017-18 காலகட்டத்தில் 81.5% செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019-20 காலகட்டத்தில் 73.76% செலவு குறைக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட நிதியிலும் ரூ.9607.65 கோடியிலிருந்து ₹7417 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.