”மணீஷ் குற்றமற்றவர்” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்த நிலையில், அவர் குற்றமற்றவர் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய…

புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்த நிலையில், அவர் குற்றமற்றவர் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டது.

இந்நிலையில், இந்த இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், தொண்டர்கள் புடைசூழ சிபிஐ அலுவலகத்தில் இன்று மணீஷ் சிசோடியா நேரில் ஆஜரானார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி, சிறிது நேரம் தியானம் செய்தார்.

இதையும் படியுங்கள் : சென்னையில் ’ஓவிய விழா’ – ஓவியங்களை வியப்புடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள்!

மணீஷ் சிசோடியா ஆஜராவதை முன்னிட்டு டெல்லியின் தெற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள், மணீஷ் சிசோடியாவிடம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

https://twitter.com/ArvindKejriwal/status/1629855927674486785

இந்நிலையில், மணீஷ் சிசோடியா கைது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மணீஷ் குற்றமற்றவர். அவரை கைது செய்ததற்கு பின்னால் அரசியல் நோக்கமுள்ளது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்கள் இதற்கு தகுந்த பதிலை அளிப்பார்கள். இது எங்களை வலுவடையத்தான் செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.