புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டது.
இந்நிலையில், இந்த இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், தொண்டர்கள் புடைசூழ சிபிஐ அலுவலகத்தில் இன்று மணீஷ் சிசோடியா நேரில் ஆஜரானார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி, சிறிது நேரம் தியானம் செய்தார்.
இதையும் படியுங்கள் : குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது பற்றி முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் விதிமீறல் இல்லை – அமைச்சர் ரகுபதி
மணீஷ் சிசோடியா ஆஜராவதை முன்னிட்டு டெல்லியின் தெற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள், மணீஷ் சிசோடியாவிடம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும், சிபிஐ விசாரணை தொடங்கிய பின்னர், 144 தடை உத்தரவை மீறியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 42 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 50 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.








