”மணிப்பூர் எரிகிறது…பிரதமர் சிரிக்கிறார்…” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

மணிப்பூர் எரிந்துகொண்டிருக்கிறது, ஆனால் பிரதமர் மக்களவையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நேற்று…

மணிப்பூர் எரிந்துகொண்டிருக்கிறது, ஆனால் பிரதமர் மக்களவையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நேற்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசியதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அவர் பெரும்பாலான நேரங்களை நகைச்சுவை செய்வதில் தான் கழித்தார். இரண்டு மணி நேரம் பேசிய உரையில் நகைச்சுவை தான் இருந்தது. இந்திய நாட்டின் பிரதமரிடமிருந்து நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

மணிப்பூர் என்ற மிக தீவிரமான பிரச்னை குறித்து பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அதைப் பற்றி கவலை இல்லாமல் சிரித்து சிரித்து நகைச்சுவை செய்து கொண்டிருந்தார். நகைச்சுவை கூறி அவையில் இருந்தவர்களை சிரிக்க வைக்கிறார். இதற்கு முன்பு இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்னையை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டிருப்பாரா என்பது தெரியவில்லை.

இந்திய நாட்டின் பிரதமர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்களவையில் இப்படியெல்லாம் பேசுவாரா என நான் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மணிப்பூருக்கு பிரதமர் நேரில் செல்ல வேணடியது கட்டாயம். மணிப்பூரில் பாரதமாதா கொலை செய்யப்பட்டார் என நான் பேசியதை பிரதமர் மோடி தவறாக திரித்து கூறுகிறார்.

நான் இப்போதும் சொல்கிறேன் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று பார்த்தேன் அங்கு நிகழ்ந்த விஷயத்தின் அடிப்படையில் சொல்கிறேன். அந்த மாநிலத்தில் பாரதமாதா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியா என்ற அடிப்படை மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளது என்று கூறியது உண்மைதான்.

நெருப்பை பற்ற வைக்க வேண்டும், பிரிக்க வேண்டும் அதை வைத்து ஆட்சி செய்ய வேண்டும். இதைத் தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். பிரச்னையை முடிக்க அவர் விரும்பவில்லை.

மணிப்பூர் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களவையில் பிரதமர் சிரித்துக் கொண்டிருக்கிறார். மணிப்பூரில் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தை ஏன் இன்னும் அனுப்பி வைக்கவில்லை?

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டால் அதற்கு ஏதேதோ சிரிப்பு வர வைக்கும் விஷயங்களை சொல்லி சமாளிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் சிரித்து சிரித்து பேசிய விசயங்கள் அனைத்தும் மணிப்பூரில் அவமானப்படுத்தப்பட்ட பெண்களைப் பார்த்து சிரித்ததாகவே நான் நினைக்கிறேன்.

பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு பிரதமராக நடந்து கொள்வார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அரசியல்வாதியாக நடந்து கொண்டார். காங்கிரஸ் ஆட்சிகளின்போது பிரதமர்கள், பாஜகவின் வாஜ்பாய் மற்ற பிரதமர்களான தேவகவுடா உள்ளிட்டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டு பார்த்ததே கிடையாது.

குறைந்தபட்சம் பிரதமர் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று இருக்க வேண்டும். அந்த மாநில மக்களை நேரில் சந்தித்து பேசி இருக்க வேண்டும். ஆனால் இதை எதையுமே செய்யவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதை செய்வதற்கான அறிகுறிகள் கூட அவரிடம் இல்லை.

என் அரசியல் அனுபவத்தில் எங்கும் கண்டிராத துயரத்தை மணிப்பூரில் பார்த்தேன். அதை தான் நாடாளுமன்றத்திலும் பேசினேன். பிரதமர் கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும். எனக்கு ராணுவம் மீது முழு நம்பிக்கை உள்ளது ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு அது இல்லை அதனால் தான் இன்னமும் மணிப்பூர் மாநிலத்திற்கு ராணுவத்தை அனுப்பாமல் இருக்கிறார்.

நான் மீண்டும் கூறுகிறேன் மணிப்பூர் மாநலத்தில. இந்தியாவின் அடிப்படை கருத்தியலை பாஜக கொலை செய்துவிட்டது. நான் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்றேன் அங்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை, தொடர்ந்து வன்முறை தான் நடக்கிறது.

அதனால் தான் அந்த மாநிலத்திற்கு ராணுவத்தை அனுப்பி முதலில் அமைதியை கொண்டு வர வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்கிறேன். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை கொண்டு வர எத்தனையோ வாய்ப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் முன்பாக இருக்கிறது. ஆனால் அவற்றில் ஒன்றை கூட அவர் பயன்படுத்தவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. எந்த ஒரு விஷயத்தையும் கூட அவர் செய்யட்டும் ஆனால் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் மணிப்பூரில் உடனடியாக அமைதியை கொண்டு வாருங்கள்.

தற்போது ராஜ்யசபா, லோக்சபா ஆகியவற்றின் தொலைக்காட்சிகளில் கட்டுப்பாடு அரசிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் என்னை காட்ட விரும்பவில்லை. அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை, நான் எனது வேலையையும் சரியாக பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.