மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் நிலம் ஒப்பந்தம் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சராக இருந்த நவாப் மாலிகிற்கு 2 மாதங்கள் ஜாமின் வழக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிழல் உலக தாதா என்று அறியப்படும் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சராக இருந்த நவாப் மாலிக் கடந்த 2022-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் சில காலமாக நீதிமன்ற காவலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே அண்மையில் நவாப் மாலிக் மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் பல்வேறு நோய்களுடன், அவருக்கு சிறுநீரக நோயும் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் நாவப் மாலிக் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜாமின் மனு மீதான விசாரணையை ஒரு வார காலத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நவாப் மாலிக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மாலிக்கின் உடல்நிலையை எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில், நவாப் மாலிக்கிற்கு, உடல் நலக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 23, 2022 அன்று பணமோசடி வழக்கு தொடர்பாக நவாப் மாலிக் கைது செய்யப்பட்ட பின்னர், 1.5 ஆண்டுகள் காவலில் இருந்ததை தொடர்ந்து இன்று இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







