மணிப்பூர் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று கோரி மைதேயி சமூகத்தினர் தொடர்ந்த வழக்கில், மைதேயி சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்பின்னர் குக்கி சமூகத்தினர் நடத்திய பேரணியில்தான் முதல் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!
இந்த வழக்கில் மணிப்பூர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல என்று உச்சநீதிமன்றமும் கூறியிருந்தது. இந்நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் இரண்டாவது முறையாக பரிந்துரை செய்துள்ளது. மேலும் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நீதிபதி முரளிதரனின் கோரிக்கையை கொலீஜியம் ஏற்க மறுத்துவிட்டது.
அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் ஜூலை மாதம் பரிந்துரைத்த நிலையில் மத்திய அரசு இன்னும் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel – ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!







