மணிப்பூர் வீடியோ விவகாரத்திற்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தும் வரும் நிலையில், மூன்று மாதங்களாக அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போது வரை மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாடுகளுக்கு முன் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிப்பதோடு, மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகளின் INDIA – கூட்டணியை சேர்ந்தோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கூடியதால் அங்கும் மணிப்பூர் விவகாரம் முக்கிய பங்கு வகித்தது. இதனால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியது. மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சூலே பேசிய போது, நாட்டின் வேலை வாய்ப்பின்மை மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த அவர் மணிப்பூர் விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த மத்திய அரசு பெண்கள் விவகாரத்தில் அவமானகரமான அரசாக திகழ்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.







