மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பு எதிரொலியாக சென்னை மடிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலியாகியுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் ஏழாவது தெருவில் லட்சுமி (வயது 40) என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (வயது 30) என்பவரும் வசித்து வந்துள்ளனர்.
ராஜேந்திரனை லட்சுமி சிறுவயதிலிருந்தே வளர்த்து வந்ததாகவும் அவரை கல்லூரி படிப்பு வரை படிக்க வைத்தாகவும் கூறப்படுகிறது. லட்சுமி, ராஜேந்திரன் மற்றும் லட்சுமியின் மகள்கள் இரண்டு பேர் என நான்கு பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்
தற்போது கூரை வீடாக இருக்கக்கூடிய சூழலில் மாண்டஸ் புயலின் தாக்கத்தின் எதிரொலியாக ஏற்பட்ட கனமழை காரணமாக மழைநீர் அந்த வீட்டை சூழ்ந்திருந்தது. இதன் காரணமாக அருகில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்காக சென்றுள்ளனர்.
தண்ணீர் தேங்கி இருந்த சாலையில் லட்சுமி தடுமாறி விழுந்துள்ளார். லட்சுமியை பிடிக்க சென்ற ராஜேந்திரனும் தடுமாறி அங்கு விழுந்துள்ளார். அவர்கள் விழுந்த இடத்தில் ஏற்கனவே மின்சார வயர் அறுந்து விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்ததால் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி லட்சுமியும், ராஜேந்திரனும் உயிரிழந்தனர்.







