திருக்கோவிலுார் அருகே வெளி மாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த நரிப்பாளையம் கிராமம் அருகே சாலையோரம் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தி மட்டுமே பேசிய அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது, “மஹாராஷ்டிரா மாநிலம், ராஜதளம் பகுதியைச் சேர்ந்த ரோஷன்திபாபூர் மனைவி ரோஷ்னி ராய் (வயது 29) என்னும் நான் பெங்களூருவில் தங்கி கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த ஒருவரிடம் கடனாக கொடுத்த 10 ஆயிரம் ரூபாயை வாங்குவதற்காக கடந்த 24ம் தேதி பெங்களூருவில் இருந்து வந்தேன். திருக்கோவிலுாரில் வந்து இறங்கிய என்னிடம், பெங்களூருவிலிருந்து என்னுடன் வந்த பெயர் தெரியாத நபர், இந்த நேரத்தில் எங்கு செல்வாய், என்னுடன் வீட்டிற்கு வந்து இரவு தங்கிவிட்டு காலையில் செல்லும்படி கூறினார். அதை நம்பி, அவருடன் ஆட்டோவில் சென்றேன். வழியில் ஒரு இடத்தில் எங்களை நிறுத்தி விட்டு ஆட்டோ சென்று விட்டது. என்னுடன் வந்தவர் சாலையோரம் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு என் தலையில் கல்லால் தாக்கினார். அதில் நான் மயக்கமடைந்தேன். மயக்கம் தெளிந்து நடந்து ஊருக்குள் வந்து மீண்டும் மயங்கி விழுந்தேன். அப்பகுதி மக்கள் என்னைக் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என தெரிவித்தார்”.

பின்னர் இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலுார் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருக்கோவிலுார் அடுத்த பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த கப்பல்துரை (வயது 50) என்பவர் பெங்களூருவில் இருந்து ரோஷ்னி ராயை அழைத்து வந்தது தெரியவந்தது. மேலும் நேற்று காலை தனிப்படை போலீசார், கப்பல்துரையை பிடித்து விசாரித்தனர்.
அதில், பெங்களூரு, மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த ரோஷ்னிராயுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரை பெருங்குறிக்கை அழைத்து வந்து, வழியில் நரிப்பாளையத்திற்கும் கூத்தனுாருக்கும் இடையே உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கப்பல்துரையை கைது செய்தனர். இவர், மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.