ராஜஸ்தானில் கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே தனது நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தின் அல்வார் பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 23 வயதுடைய இளம்பெண்ணிற்கு அவருடைய பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து சில வாரங்கள் சென்ற நிலையில், இளம்பெண்ணின் மாமனார் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சனை கேட்டு இளம்பெண்னை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் எந்த செய்வதென்று அறியாது திகைத்துள்ளார் இளம்பெண். பின்னர் இதுக்குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். பெற்றோரும் கூடுதல் வரதட்சனைக்காக பணம் ஏற்பாடு செய்வதாகவும் அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொளும்படியும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல, இளம்பெண்ணிற்கு கூடுதல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் இளம்பெண்ணின் கணவரே, அவரது நண்பரை அழைத்து வந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். பின்னர் மீண்டும் அடுத்த நாள் இன்னொரு நண்பர், அதற்கடுத்த இன்னொரு நண்பர் என தினமும் வேறு வேறு நண்பர்களை அழைத்து வந்து மனைவி பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார்.
இதனால் கொதித்தெழுந்த இளம்பெண் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள பசேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூடுதல் வரதட்சனை கேட்டு, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பாக கணவரின் நண்பர்களை வைத்து தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கணவரையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்வதற்காக சென்றுள்ளனர். ஆனால் மனைவி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் என்பதை அறிந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட பெண், மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தலைமறைவாகியுள்ளவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்றுவருவதாகவும் கூறினார். ஏற்கெனவே கடந்த மாதம் வரதட்சனை பிரச்சினையால் கேரளாவில் இளம் பெண் பொறியாளர் ஒருவர் உயிரிழப்பு செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராஜஸ்தானில் வரதட்சனைக்காக மனைவியை நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







