யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்த அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட கோவில் நத்தம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் யானை கொன்று புதைத்துள்ளதாக பர்கூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கோவில் நத்தம் பகுதியில் புறம்போக்கு நிலத்தினை தோண்டி பார்த்த போது 30வயது மதிக்கத்தக்க ஆண் யானை மீது மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்துள்ளதாக தெரியவந்தது.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவரை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் கைது செய்து பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே கொல்லப்பட்ட யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் மீட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







