டன்ஜியன்ஸ் & டிராகன்கள்: ஹானர் அமாங் தீவ்ஸ் படம் முட்டாள்தனங்கள் நிறைந்த வேடிக்கையான கற்பனை கதையாகும். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான நகைச்சுவைகள் இந்த படத்தில் நிறைந்துள்ளன.
டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் என்பது வீட்டிற்குள் விளையாடப்படும் ஓர் உள்ளரங்க விளையாட்டு. மேசையைச் சுற்றி வீரர்கள் அமர, அதிலொருவர் டன்ஜியன் மாஸ்டராகப் பங்கு வகிப்பார். மற்ற வீரர்கள் ஒரு பாத்திரத்தை பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கான செயல்களைப் புரிவதோடு, மற்ற கதாபாத்திரங்களுடன் அதற்குத் தக்கவாறு தொடர்புகளையும் கொண்டிருப்பர். இதுவே, இந்த சாகச விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.
ஒரு புத்திசாலி திருடன், சாகசக்காரர்களின் குழுவுடன் கைகோர்த்து, தொலைந்து போன நினைவுச் சின்னத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு சாகசத் திருட்டை மேற்கொள்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக தவறான நபர்களிடம் மாட்டிக்கொள்வார்கள். பின்னர் அவர்களிடமிந்து எப்படி தப்பிக்கிறார்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதை..
ஜொனாதன் கோல்ட்ஸ்டைன் & ஜான் பிரான்சிஸ் டேலி இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இவர்களுடன் இணைந்து மைக்கேல் கிலியோ திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். கிறிஸ் பைன், மைக்கேல் ரோட்ரிக்ஸ், ரெஜி-ஜீன் பேஜ், ஜஸ்டிஸ் ஸ்மித், சோபியா லில்லிஸ், சோலி கோல்மன், டெய்சி ஹெட், ஹக் கிராண்ட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ள கிறிஸ் பைன் புத்திசாலித்தனமாகவும், தன்னுடைய சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள மைக்கேல் ரோட்ரிக்ஸ் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். அவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. உருமாறும் திறன்கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சோபியா லில்லிஸ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கொள்ளை கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
லார்ட் ஆஃப் தி ரிங் திரைப்படத்தில் வரும் கிராமங்களும், விசித்திரமான நகரங்களும் இந்த படத்திலும் இடம் பெற்றிருக்கும். அந்த படத்தை பார்த்து காப்பி அடித்தது போல நமக்கு தோன்றுவதை தவிர்க்க முடியாது.
கற்பனை கதை என்பதால் அதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களும் மிகவும் வித்தியாசமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குண்டான டிராகன் மற்றும் கலவையான உயிரினங்களின் கிராபிக்ஸ் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும். அதே போல சில இடங்களில் வரும் visual effects மந்திரவாதிகளைகளின் மேஜிக்கை விட நம்மை ஈர்க கூடிய வகையில் இருக்கும்.
2 மணி நேரம் மட்டுமே படத்தின் நீளம் என்றாலும் முதல் பாதி கொஞ்சம் இழுத்துக்கொண்டே செல்கிறது. நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கதைக்கு சற்று முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் ரசிக்க கூடிய படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. டன்ஜியன்ஸ் & டிராகன்கள்: ஹானர் அமாங் தீவ்ஸ் திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.







