அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசை

பர்கூர் அருகே அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற செவிலியரை கத்தியால் தாக்கி தங்க சங்கிலியைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி…

பர்கூர் அருகே அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற செவிலியரை கத்தியால் தாக்கி தங்க சங்கிலியைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ்
என்பவரது மனைவி பானுமதி. 68 வயதான இவர் கிராம செவிலியராகப் பணி செய்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மகள் உள்ளார்.
அவர் திருமணமாகி பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணி
புரிந்து வருகிறார். இந்நிலையில், கணவர் ராமதாஸ் இறந்துவிட்டதால் பானுமதி
மல்லப்பாடியில் உள்ள அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை மழை பெய்த பொழுது வீட்டின் வெளியே உள்ள கேட்டை பூட்டிவிட்டு வருவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்ற பானுமதியை பக்கத்து வீட்டில் உள்ள யாஸ்மின் என்பவரது தம்பி மசூத் கான் என்பவர் ஓடிச் சென்று பானுமதியை வீட்டின் உள்ளே தள்ளி கதவை தாளிட்டு கத்தியால் கழுத்தில் பலமாக
தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பானுமதி வீட்டில் மயங்கி உள்ளார்.
பின்னர், மசூத் கான் பானுமதி கழுத்தில் இருந்த 2 1/2 சவரன் தங்க சங்கிலியை
பிடுங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார்.

அப்போது, ஓடி வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பானுமதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபொழுது பானுமதி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பர்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு 24 தையல்கள் போடப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி மசூத்
கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.