இந்திய அரசியலில் வங்கத்து புலியாய் வலம் வரும் மம்தா பானர்ஜி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.1996 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி,2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகள் அமைந்ததில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கிய…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.1996 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி,2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகள் அமைந்ததில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கிய பங்கு வகித்தது. 2004 ஆம் ஆண்டு மக்களவையில் கம்யூனிஸ்ட்களுக்கு 61 எம்.பி க்கள் இருந்தனர்.

இனி வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் கொடி தான் பறக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி, மூன்றாம் முறையாக மேற்கு வங்க முதலமைச்சராக தொடர்கிறார் மம்தா பானர்ஜி. அவரின் பிறந்த நாளில் அவர் கடந்து வந்த அரசியல் பாதையை பார்க்கலாம்..

மம்தா பானர்ஜி 1955 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி பிறந்தவர். மம்தாவின் தந்தை ஒரு விடுதலைப்போராட்ட வீரர்.

தந்தையின் வழியில் காங்கிரசில் சேர்ந்த மம்தா, மாணவப்பருவம் முதலே
காங்கிரசின் அதிதீவிர செயற்பாட்டாளராக இருந்தார். கல்லூரியில் முதுகலை பட்டத்துடன் , சட்டம் பயின்றார். ஆசிரியராகவும், ஓவியராகவும் தன்னை தகவமைத்து கொண்டார். முற்பட்ட சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் ,முதுகலையில் இஸ்லாமியம் மதம் சார்ந்த படிப்பை படித்தார்,

நெருக்கடி நிலையை எதிர்க்கவும், மக்களிடம் ஆதரவு திரட்டவும் மேற்கு வங்கம் வந்த சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனின் காரை மறித்து, அவருடன் கடும் வாக்குவாதம் செய்ததால் ஒரே நாளில் வங்கம் தாண்டி, டெல்லி வரை பிரபலமானார் பிரணாப் முகர்ஜியின் சிஷ்யையான மம்தா.

இளைஞர் காங்கிரஸ் தலைவர், கட்சியின் தேசிய செயலர் என காங்கிரஸ் கட்சியில் உச்சம் தொட்டார். 29 வயதில், 1984 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ஜாதவ்பூர் தொகுதியில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜியை வென்று முதல் முறை எம்.பி யாக தேர்வானார். ஆனால் அடுத்து வந்த 1989 தேர்தலில், கம்யூனிஸ்ட்களின் களப்பணியால் தோல்வியை தழுவினார். 1991 முதல் 2011 வரை கொல்கத்தா தெற்கு தொகுதி எம்.பியாக இருந்தார்.

நரசிம்மராவ் ஆட்சியில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார் மம்தா. மார்க்சிஸ்ட் கட்சியை  ஆட்சியை விட்டு அகற்றுவதில் தீவிரம் காட்டியதால் காங்கிரசில் இருந்து விலகி , முகுல் ராயின் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து தலைவரானார். வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய ரயில்வே மற்றும் மின் துறை அமைச்சராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சியில் ரயில்வே அமைச்சரானார். துரந்தோ விரைவு வண்டி, இளைஞர்களுக்கான யுவா, மகளிர்களுக்காக ‘மகளிர் மட்டும்’ போன்ற புறநகர் தொடர்வண்டிகளை அறிமுகப்படுத்தினார்.

மேற்கு வங்காளம் சிங்கூரில்  டாடா வின் நேனோ கார் தொழிற்சாலை மற்றும் நந்திகிராமில் தனியார் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்க விவசாயிகள் நிலத்தை அரசு பலவந்தமாக கைப்பற்ற முயற்சித்த போது,விவசாயிகளுக்கு ஆதரவாக அணி திரண்டார் மம்தா. இதில்  கலவரம் மூண்டதில், 14 விவசாயிகளை போலிஸ் சுட்டுக்கொன்றது. கம்யூனிஸ்ட்களின் வன்முறையை நாடறியச் செய்த மம்தா, 2011 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். 34 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தினார்..மொத்தமுள்ள 294 இடங்களில், 184 இடங்களை வென்று மேற்கு வங்க முதலமைச்சராக பொறுப்பேற்றார் மம்தா பானர்ஜி. அத்துடன் 20 ஆண்டுகள் முன்பு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சியை அகற்றுவேன் என்ற சபதத்தை நிறைவேற்றினார்

மேற்கு வங்க அரசின் தலைமைச்செயலகத்தில் அரசை எதிர்த்து, ஒரு முறை மறியல் செய்தார் மம்தா. அப்போது ஜோதிபாசு அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த புத்த தேவ் பட்டாச்சார்யா மம்தாவின் தலைமுடியை பிடித்து, இழுத்து அந்த வளாகத்தை விட்டு வெளியேற்றினார்.அப்போது வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சியை அகற்றுவேன் என சபதம் எடுத்தார் மம்தா பானர்ஜி, அதை யாரும் அப்போது பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனாலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சபதத்தை நிறைவேற்றி மேற்கு வங்காள முதலமைச்சராகி வரலாற்றில் இடம் பிடித்தார்.

2016 தேர்தலில் 211 இடங்களையும், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 213 இடங்களிலும் வென்று,மூன்றாவது முறையாக முதலமைச்சராக தொடர்வதுடன் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திரிணாமுல் காங்கிரசை நிலைபெற செய்துள்ளார்.

2019, மக்களவை தேர்தலின் போதும், 2021 ஆம் ஆண்டு சட்ட பேரவை தேர்தலின் போதும் , மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடனும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய தலைவர்களுடன் கடுமையாக மோதி வங்கத்து புலி என்பதை மம்தா நிரூபித்தார்.ஆனாலும் முன்பு மம்தாவின் தொண்டராக இருந்து, இப்போது பாஜகவில் உள்ள சுவேந்து அதிகாரியிடம்,1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த பவானிப்பூர் தொகுதியில் எம்.எல்.வாக தேர்வாகி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டார்

ஜி.எஸ்.டி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என முக்கிய பிரச்சனைகளில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார் மம்தா. அதே போல் திரிணாமூல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்து ,சிறையில் அடைக்கும் பாஜக அரசின் , நடவடிக்கைகளை சளைக்காமல் உறுதியாக எதிர் கொண்டு வருகிறார்… மம்தா

ஜெயலலிதாவை போல், மம்தா பானர்ஜியும் தேர்தல் களத்தில், லேடியா, மோடியா என்பதோடு,குஜராத் சிங்கம், வங்கப்புலியிடம் தோற்றொடும் என்று சூளுரைத்தார். நானும் இந்து, காளியை, துர்கையை அனுதினமும் தியானிக்கிறேன் என தேர்தல் களத்தில் பாஜக வினரால் கடுமையாக தாக்கப்பட்ட போதும் , சளைக்காமல் சக்கர நாற்காலி வண்டியில் வலம் வந்து,வெற்றி கணியை பறித்தார்.

என்ன தான் மம்தா பாஜவை கடுமையாக எதிர்த்தாலும்.. உள்ளூர பாஜக வை ஆதரிக்கிறார். மம்தா அரசுக்கு கடுமையான குடைச்சல் கொடுத்த, மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு குடியரசு துணை தலைவர் தேர்தலில் ஆதரவளித்தார் . வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அரசை அகற்ற, காங்கிரஸ் தலைமையில் வலுவான அணி அமைவதை கர்நாடகத்தில் முட்டுக்கட்டை போடுகிறார், மாநில சட்டமன்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுத்து, அந்தந்த மாநிலங்களில் பெயரளவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிட வைக்கிறார் போன்ற மம்தா வின் செயல்பாடுகளை சாதாரணமாக கடந்து விட முடியாது என்கின்றனர் அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அடுத்து வரும் தேர்தலின் மம்தாவின் நடவடிக்கையை பொறுத்தே, மம்தாவின் அரசியல் வாழ்க்கையின் மதிப்பீடு அமையும் என்றால் மிகையில்லை..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.