குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படட்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசு விழாவில் மம்தா பேச்சு:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேற்கு வங்க அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில், அம்மாநில அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த நடிகை அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நடைபெற்ற பங்கா பூஷன், பங்கா விபூஷன் விருது வழங்கும் விழாவில் இது குறித்து முதல்முறையாக பேசினார்.
தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்:
பார்த்தா சாட்டர்ஜியின் பெயரை குறிப்பிடாமல், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். எனினும், இதுகுறித்த விசாரணை விரைவாக நடத்தப்பட்டு உரிய காலத்தில் உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய மம்தா பானர்ஜி, தவறிழைத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் அது குறித்து தனக்கு கவலை இல்லை என்றார்.
அச்சுறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என தெரிவித்த மம்தா, நடிகை அர்பிதா முகர்ஜி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில், அவர், பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் என தனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்தா:
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் பார்த்தா சாட்டர்ஜி இல்லை என்று அவரது உடல்நிலை குறித்து பரிசோதித்த புபனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னை மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்த்தா சாட்டர்ஜியை ஒடிஷா தலைநகர் புபனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து அவரது உடல்நிலை குறித்து பரிசோதிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டது.
பார்த்தா சாட்டர்ஜிக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புபனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ஆசுதோஷ் பிஸ்வாஸ், பார்த்தா சாட்டர்ஜிக்கு அவசர பிரச்னை என்று ஏதும் இல்லை என்றும், பொதுவான சில பிரச்னைகள் இருப்பதால் அதற்கான ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.