குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கோபத்தை வெளிப்படுத்துவதற்குப் பதில் தலைமைப் பண்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மார்கரெட் ஆல்வா, மம்தா பானர்ஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை நிறுத்துவதற்கு முன்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அழைக்கப்படவில்லை.
டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, சிவ சேனா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, மார்கரெட் ஆல்வாவை அறிவித்தனர்.
அப்போது, மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவு கோரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட காரணமாக இருந்தவர் மம்தா பானர்ஜி. எனினும், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படாததால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலை திரிணாமூல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சி அறிவித்தது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 35 எம்பிக்களைக் கொண்டிருக்கும்போது, அதனை உரிய முறையில் நடத்தாததை ஏற்க முடியாது என்று அக்கட்சியின் எம்பி அபிஜித் பேனர்ஜி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். என்ன நடந்ததோ அது குறித்து கோபம் கொள்வதற்கான நேரம் இதுவல்ல என தெரிவித்துள்ள மார்கரெட் ஆல்வா, துணிச்சலையும், தலைமைப் பண்பையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது குறிப்பிட்டுள்ளார். துணிச்சலின் மறு உருவமாக விளங்கும் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளுடன் நிற்பார் என நம்புவதாகவும் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.









