பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது சொந்த ஊரில் பிறந்த நாள் கொண்டாடியபோது தனது தாய், தந்தையின் நினைவுகளில் மூழ்கி தேம்பி தேம்பி அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 84 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட நாட்களுக்கு பின் திண்டிவனம் அருகே உள்ள தனது சொந்த ஊரான கீழ்சிவிரிக்கு சென்ற ராமதாஸ் தனது குழந்தைப் பருவ நினைவுகளில் மூழ்கினார். அங்கு ராமதாசுக்கு பொதுமக்கள் சார்பாகவும், பாமகவினர் சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது 84வது பிறந்த நாளை முன்னிட்டு தனது சொந்த ஊரில் 84 அடி உயர பாமக கொடியை ஏற்றி வைத்தார்.
கீழ்சிவிரியில் தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது பெற்றோர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது தனது பெற்றோரின் நினைவுகளில் மூழ்கிய ராமதாஸ், பெற்றோர் தம்முடன் தற்போது இல்லாததை நினைத்து தேம்பி தேம்பி அழுதார். இந்த காட்சியை கண்டவர்கள் ராமதாஸ் தனது பெற்றோர் மீது வைத்துள்ள பாசத்தையும், மரியாதையையும் நினைத்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்திருந்த மேடையில் பொது மக்களிடையே உரையாற்றினார். தனது இளமைப் பருவ மலரும் நினைவுகளில் மூழ்கி ராமதாஸ், தனது சொந்த ஊருக்காகவும், அந்த ஊர் மக்களுக்காகவும் கவிதை ஒன்றை வாசித்தார்.
”என்ன தவம் செய்தேனோ இம்மண்ணில் நான் பிறக்க, ஏது தவம் செய்தேனோ இன்று உங்களோடு நான் இருக்க!
என்ன தவம் செய்தேனோ இம்மண்ணில் என் ஊரில் இன்று நான் கால் பதிக்க,
என்ன தவம் செய்தேனோ எம் மக்கள் இன்று உங்களோடு
நான் இருக்க!
முந்தி தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து என்னை ஈன்றெடுத்த என் தாயே,
எனக்கொரு வரம் தருவாய்!
எழு பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க அருள் புரிவாய்!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இச்சிற்றூரில் யான் பிறக்க என்ன தவம் செய்தேனோ!”
சிறுவயதில் கீழ்சிவிரியில் தான் உலாவிய தெருக்களையும் லீதிகளையும் நினைவுகூர்ந்தபடியே உணர்வுப்பூர்வமாக இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கும்போதே பாமக நிறுவனர் ராமதாசுக்கு கண்கலங்கியது. இந்தக் காட்சியை கண்ட கீழ்சிவிரி மக்களும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.







