நீட் தேர்வில் முறைகேடு : குஜராத்தில் மூவர் கைது!

குஜராத்தில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும்…

குஜராத்தில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வு மே 5ம் தேதி நடைபெற்றது.இந்நிலையில், நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக சில மாநிலங்களில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், குஜராத் மாநிலம் கோத்ராவில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் உதவியுடன் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பள்ளி ஆசிரியர், உதவி செய்த இரண்டு பேர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற உதவுவதாகக் கூறி மாணவர்களிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு, போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘அமரன்’ படக்குழு!

தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் துஷார் பத், நீட் தேர்வு மைய துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி பேரம் பேசியிருக்கிறார். இவருக்கு உதவியதாக மேலும் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது காரிலிருந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.

அதன்படி, பதில் தெரியாத விடைகளை அவர்கள் வெறுமனே விட்டுவிட்டுச் செல்லும்படியும், விடைத்தாள்கள் பெற்றபிறகு அந்த ஆசிரியர்கள் அதனை பூர்த்தி செய்வதாக பேரம் பேசப்பட்டுள்ளது.

தேர்வு நடந்தபோது, பறக்கும்படையினர் தேர்வறையை சோதனை செய்தபோது, துஷார் பத்தின் செல்போனில், தேர்வு எழுதும் 16 மாணவர்களின் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதில் ஒரு மாணவரிடமிருந்து முன்பணமாக ரூ.7 லட்சம் பெறப்பட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.